பயணிகள் கவனிக்கவும் திரை விமர்சனம்

சமூக வலைத்தளங்களை பயன்பற்றும் பலர் அவர்களுக்கு வரும் தகவல்களை அதன் உண்மை தன்மை ஆராயாமல் அதை பலருக்கு பகிர்ந்து வரும் வழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக பல அப்பாவி மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் கொலை செய்யப்பட்டும், சிலர் தற்கொலை செய்துகொண்டும் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் தவறான தகவலினால் பாதிக்கப்படும் ஒரு குடும்பம் பற்றி பேசும் படம் தான் இந்த “பயணிகள் கவனிக்கவும்”.

துபாயில் பணியாற்றும் கருணாகரன் விடுப்பில் சென்னையில் உள்ள அவனது வீட்டுக்கு வருகிறான். சென்னை மெட்ரோ ரயிலில் கருணாகரன் பயணிக்கும் போது, அதே ரயிலில் இருக்கையில் படுத்து தூங்கி கொண்டிருக்கும் வாய் பேச முடியாத விதார்த்தை தன்னுடைய கைபேசியில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் விதார்த் மது போதையில் உறங்கி கொண்டிருப்பதாக பதிவிடுகிறார் கருணாகரன். உண்மை என்னவென்றால், விதார்த்தின் மகள் உடல்நலம் சரியின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அசதியில் மெட்ரோ ரயிலில் உறங்கியுள்ளார் விதார்த்.

விதார்த் பற்றிய அந்த தவறான தகவல் கொண்ட வீடியோவை கருணாகரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை பலர் பகிர்ந்து அது தொலைக்காட்சியில் செய்தியாக ஒளிபரப்பப்பட்டு விதார்த்தின் வேலை பாறிப்போகிறது, அவருடைய குடும்பத்தில் குழப்பம் உண்டாகிறது. இந்த தவறான வீடியோ பதிவிட்டதை பற்றி விதார்த்தின் வீட்டு உரிமையாளரான ‘கவிதாலயா’ கிருஷ்ணனின் மகள், விதார்த் அன்று ரயிலில் உறங்கிய உண்மை பற்றி அதே சமூக வலைதளத்தில் பதிவிட்டு, விதார்த்தை காவல் துறையில் புகார் கொடுக்க வைக்கிறார்.

விடுப்பில் வந்த கருணாகரன் தான் விரும்பி வந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். விதார்த்திடம் புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறை, தவறான வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றவாளியை சைபர் க்ரைம் உதவியுடன் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். இந்த தகவலை செய்திகள் மூலமாக கருணாகரன் அறிந்து கொள்கிறார். புகார் பயத்தில் இருக்கும் கருணாகரன், திருமணத்தின் போதும், திருமணம் முடிந்த பிறகும் திருமண சந்தோஷத்தை கொண்டாடாமல் பாதபதைப்புடன் அலைகிறார்.

தவறாக வீடியோ தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பிய கருணாகரன் சகாவால் துறையிடம் சிக்குகிறாரா, இந்த தவறான வீடியோ பரப்பப்பட்டதினால் விதார்த் மற்றும் அவருடைய குடும்பம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் படத்தின் கதை.

விதார்த் இதுவரை பல படங்களில் நன்றாக நடித்திருந்தாலும், இப்படத்தில் வாய் பேசாத ஒருவராக நடித்து தன்னுடைய நடிப்பிலும், வாய் பேச இயலாதவர்கள் பேசும் மொழியிலும் பேசி அசத்தியுள்ளார். விதாரத்தின் இப்படத்திற்க்கான நடிப்பிற்கு கண்டிப்பாக அவருக்கு தேசிய விருதை வழங்கலாம். விதாரத்தின் வாய் பேச முடியாத மனைவியாக நடித்துள்ள லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி தன்னுடைய நடிப்புக்கு நேர்மை செய்துள்ளார். கருணாகரனின் வெவ்வேறு படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இப்படத்தில் ஒரு புதிய பரிமானத்துடன் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய நடிப்புக்கு நியாயம் செய்துள்ளார் கருணாகரன். கருணாகரனின் ஜோடியாக நடித்திருக்கும் மாசும் ஷங்கர் நடிப்பு குறிப்பிட்டு பேசுமளவுக்கு ஒன்றும் இல்லை. காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் பிரேம் குமார், வீடு உரிமையாளராக நடித்திருக்கும் ‘கவிதாலயா’ கிருஷ்ணன், மூனார் ரமேஷ் எப்போதும் போல் தங்களுடைய நடிப்புக்கு நியாயம் செய்துள்ளனர். மற்ற நடிகர்கள் தங்களுடைய பணியை சிறக்க செய்துள்ளனர்.

எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு மற்றும் ஷாமந்த் நாகின் இசை இப்படத்திற்கு ஓகே மட்டுமே. இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் தேர்ந்தெடுத்துள்ள கதைக்களம் பாராட்டுதலுக்குரியது. திரைக்கதையை சீராக எழுதி நேர்த்தியாக இயக்கியுள்ள எஸ்.பி.சக்திவேலுக்கு துணையாக இருந்து படத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார் ஆர்.எஸ்.சதீஷ்குமார். படத்தொகுப்பாளர் ஆர்.எஸ்.சதீஷ்குமார் இயக்குநரிடம் பேசி சில இடங்களில் வரும் தேவையற்ற காட்சிகளை வெட்டி போட்டிருந்தாள் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

“பயணிகள் கவனிக்கவும்” திரைப்படம் “ஆஹா” “Aha” ஓடிடி தளத்தில் ஏப்ரல் 29, 2022 அன்று வெளியாகிறது.

“பயணிகள் கவனிக்கவும்” திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு படம் மட்டுமல்ல, இது ஒரு பாடமே.

மதிப்பீடு: 3.25/5

Leave a Response