எங்களின் திறமையை வெளிப்படுத்த உதவும் ஒரு அழகான படைப்பாக இருக்கும் – விவேக் & மெர்வின்

இசை அனைத்தையும் குணப்படுத்தும் அருமருந்து. மனித உணர்வுகளின் ஆழ்நிலை வரை செல்லும் திறன் இசைக்கு உண்டு. அந்த இசை அழகான காதல் கதைகளுடன் கலக்கும்போது, அது ஒரு தவிர்க்க முடியாத ஈர்ப்பாக மாறும்.

அந்த வகையில் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இரட்டையர்களால் இசையமைக்கப்பட்ட, ஜனவரி 13, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன் நடித்த “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் பாடல்கள், இதற்கு மிகப்பொருத்தமான எடுத்துக்காட்டாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த ஆல்பம், கேட்பவர்களின் இதயம் எந்த விதத்தில் காயப்பட்டிருந்தாலும், அதிலும் குறிப்பாக தொற்றுநோய் கால கட்டத்திய சிரமங்கள் முதல் எதுவாயினும், அதனை குணப்படுத்தும் அழகான இசையை இந்த ஆல்பம் கொண்டிருக்கிறது. அதற்கு முன்னுதாரணமாக இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன, மேலும் அவை நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மிகவும் பொருத்தமானதாகவும், மனதிற்கு நெருக்கமாகவும் அமைந்துள்ளன.

இது குறித்து இயக்குனர் ஹரிஹரன் கூறுகையில்,

“திரைக்கதை எழுதும் போதே இசையுடன் சேர்த்து தான் படத்தையே யோசித்தேன். காதல் படங்கள் என்று வரும்போது, இசையும் காதலும் பிரிக்க முடியாதவை, மேலும் ‘என்ன சொல்ல போகிறாய்’ கதையை ரசிகர்களின் மனதில், இசையின் மூலம் உணர்வுப்பூர்வமாக உயிர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். விவேக் மற்றும் மெர்வின் இசையமைப்பில் இறுதிப்பதிப்பு மிக அற்புதமாக வந்திருப்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ரசிகர்களும் அவ்வாறே உணர்வார்கள் மேலும் ஒவ்வொருவரும் இந்த இசையினை பாராட்டுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

இசையமைப்பாளர்கள் விவேக் & மெர்வின் கூறும்போது…,

“இயக்குநர் ஹரிஹரன் இந்த திரைக்கதையை விவரித்தபோது, என்ன சொல்ல போகிறாய் படம் எங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்த உதவும் ஒரு அழகான படைப்பாக இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். எங்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கிய ஒரு படம் கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பாடல்களை கேட்பவர்கள் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்து பாராட்டும்போது, அதே போல் உணர்வை அவர்கள் பின்னணி இசையிலும் அடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தனர்.

Trident Arts தயாரிப்பாளர் R.ரவீந்திரன் கூறும்போது..,

“இயக்குநர் ஹரிஹரன் கதையை கேட்டு முடித்த உடனேயே, ஒரு புதிய இளம் நடிகர் நடிக்க இந்த திரைக்கதை மிக நன்றாக இருக்கும் என்று உணர்ந்தேன். உடனே அஷ்வின் குமார், தேஜு அஸ்வினி, அவந்திகா என் நினைவுக்கு வந்தனர். நடிகர்கள் தேர்வு முடிந்தவுடன், இந்தப் படத்திற்கு இசை மிக முக்கியமான தூணாக இருக்கும் என்று நான் உறுதியாக உணர்ந்தேன், மேலும் இந்தப் படத்தை சிறந்த பின்னணி இசையால் அலங்கரிக்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்க விரும்பினேன். இறுதிப்பதிப்பை பார்த்த பிறகு, விவேக்-மெர்வின் இசையால் நான் மிக மிக மகிழ்ந்தேன். மேலும் நான் கதை கேட்ட போது மனதில் நினைத்தது அப்படியே திரையில் வந்திருப்பதில், ஒரு தயாரிப்பாளராக நான் பெருமைப்படுகிறேன்” என்று உணர்ச்சி போங்க கூறினார்.

“என்ன சொல்ல போகிறாய்” திரைப்படம் ஜனவரி 13, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை Trident Arts தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரித்துள்ளார். இயக்குநர் ஹரிஹரன் இயக்கியுள்ளார். அவந்திகா மிஸ்ரா மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில், புகழ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Leave a Response