இயக்கம் – வசந்தபாலன்
நடிகர்கள் – ஜீ வி பிரகாஷ், அபர்னிதி, ராதிகா சரத்குமார்.
கதை – சென்னையை அடுத்த குடிசைமாற்று வாரிய குடியிருப்பில், வாழும் இளைஞர்கள் கஞ்சா விற்று, சிறு சிறு குற்றங்கள் செய்து பிழைத்து வருகிறார்கள். கஞ்சா விற்பதில் இரு கூட்டத்திற்கு இடையில் ஆரம்பிக்கும் பிரச்சனை அந்த இளைஞர்களின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பது தான் கதை.
தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் செய்யும் இயக்குநர்கள் லிஸ்டில் இடம்பிடிப்பவர்
இயக்குநர் வசந்தபாலன். அவரின் படங்கள் யாவும், சமூகத்தில் உரிமை மறுக்கப்படும் மக்களின் வாழ்க்கை பதிவாக இருக்கும். நீண்டதொரு இடைவேளைக்கு பிறகு செய்துள்ள படம் தான் “ஜெயில்”
சென்னையின் பூர்வகுடிகள் சென்னை வெள்ளத்திற்கு பிறகு தன் சொந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டு, சென்னையை தாண்டி 30 கிமி தொலைவில், ஒரு ஜெயில் போன்ற குடியிருப்பில் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு அடைக்கப்பட்ட கதை தான் இந்தப்படம்.
ஒரு இடத்தில் மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிக்கப்பட அங்குள்ள மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு என அனைத்தும் கஷ்டமாக இருக்க அவர்கள் சிறு சிறு குற்றங்கள் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகள் என முத்திரை குத்தப்பட்டு, போலீஸால் வேட்டையாடப்படுகிறார்கள். இந்த அவலத்தை கேள்வி கேட்கும் படமாக வந்திருக்கிறது “ஜெயில்”
அங்கு வாழும் இளைஞர்கள் வாழ்வில் குற்றங்கள் எப்படி மிக எளிமையான ஒரு விஷயமாக மாறிவிட்டதென்பதும், அந்த குற்றங்களே அவர்கள் வாழ்வை எப்படி சிதைக்கிறது என்பதை தத்ரூபமாக திரையில் பதிவு செய்திருக்கிறது இந்தப்படம்.
படத்தின் கதையின் மையம் துரைப்பாக்கம் காவேரி நகர் மக்கள் படும் அவலத்தை கான்பிப்பதற்கு பதில் அங்கு அவர்கள் செய்யும் குற்றங்களை தான் காண்பிப்பது மட்டும் கொஞ்சம் மைனஸாக அமைந்திருக்கிறது.
நாயகன் ஜீவி தனக்கு தந்திருக்கும் பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார். அழுக்கு இளைஞனாக, திருடனாக, நண்பனுக்காக உருகி, என முழுக்க வேறு முகம் காட்டியிருக்கிறார்.
நாயகி அபர்நிதி புதுமுகம் மாதிரியே தெரியவில்லை, நடிப்ப்பில் தேர்ச்சி பெற்ற நாயகிகளையே மிஞ்சும் வகையில் குப்பத்து பெண்ணை பிரதிபலித்திருக்கிறார். நண்பர்களாக வரும் இளைஞர்களும் தங்கள் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். ராதிகா வெகு நாட்கள் கழித்து கவர்கிறார்.
ஜீவியின் இசை பாடல்களில் அதிகம் கவரவில்லை ஆனால் பின்னணி இசையில், அழுத்தமாக தன் பங்கை தந்திருக்கிறார். இடைவேளை சேஸிங் காட்சியில் பரபரக்கும் கேமரா அட்டகாசம். ஒளிப்பதிவு காவேரி நகரை கண்முன் கொண்டு வந்திருக்கிறது.
திரைக்கதையில் காட்சி அமைப்பு ஆங்காங்கே தொடர்பில்லாமல் தொங்குகிறது. திடீரென பாடல்கள் வருவது அபத்தமாக இருக்கிறது. களத்தை தேர்ந்தெடுத்து அதன் பின்னணி ஆய்வுகளை செய்து ஒரு தரப்பு மக்களின் வலியை பதிவு செய்ததற்காக வசந்தபாலனுக்கு கண்டிப்பாக பாராட்டு தெரிவிக்கலாம்.
திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் அனைத்து தரப்பையும் இந்தப்படம் கவர்ந்திருக்கும்
ஜெயில் சமூகத்திற்கு அவசியமான பதிவு.