திருமணமான பெண்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை விவரிக்கும் கூழாங்கல்…

இயக்குநர் விக்னேஷ் ஷிவன் மற்றும் நடிகை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் “கூழாங்கல்”. இப்படத்தை புதுமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்க, கருத்தடையான், செல்லப்பாண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திருமணமான பெண் ஒருவரும் அவரது குழந்தையும் எதிர்கொள்ளும் துன்பங்களை விவரிக்கிறது இந்த 94-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமான “கூழாங்கல்” திரைப்படம். 94-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக இந்த “கூழாங்கல்” இடம்பெற்றுள்ளது.

கோவாவில் நடைபெற்று வரும் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பில் இப்படத்தின் இயக்குநர் வினோத்ராஜ் பேசியதாவது, “எளிமையான வடிவத்தில் சொல்லப்பட்ட ஒரு எளிய கதை இது. என் வாழ்க்கையிலிருந்தே இப்படம் உருவாகியுள்ளது. குடிகார கணவரால் எனது சகோதரியும் அவரது சிறு குழந்தையும் படும் துன்பங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது,” என்றார்.

தனது முதல் திரைப்படத்தைப் பற்றி மேலும் கூறிய அவர், கூழாங்கல் ஒரு குடிகார ஆணுக்கும் அவரது மகனுக்கும் இடையிலான உறவை அடிப்படையாகக் கொண்டது, தந்தையின் வீட்டிற்குச் சென்ற மனைவியை மீண்டும் அழைத்து வருவதற்கான அவரது பயணத்தை முன்வைப்பதாகவும் இது உள்ளது என்றார்.

“கதை மற்றும் அது நடைபெறும் நிலப்பரப்பு இரண்டும் என் மனதுக்கு நெருக்கமாக இருந்ததால் படத்தை எனது சொந்த கிராமத்தில் படமாக்கினேன். வறண்ட நிலப்பரப்பு மற்றும் முழு கதைக்களமும் அமைக்கப்பட்டிருக்கும் வெயில் பின்னணி ஆகியவை கதாபாத்திரங்களின் நடத்தைக்கு முக்கியமான காரணங்களாகும்,” என்று படத்தில் நிலப்பரப்பின் முக்கியத்துவம் குறித்த கேள்விக்கு வினோத்ராஜ் பதிலளித்தார்.

படத்தை உருவாக்கும் போது தனக்கு ஏற்பட்ட சிரமங்களை விவரித்த வினோத்ராஜ், முதலில் திரைப்படத்தை எடுக்க போதுமான பணம் இல்லை என்று கூறினார். “தயாரிப்பாளர் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் படத்தின் முழுமை பெறாத பகுதியை NFDC ஃபிலிம் பஜாருக்கு அனுப்பியிருந்தோம். அதை பிரபல தமிழ் இயக்குநர் ராம் கவனித்தார், பின்னர் அவர் எங்களுக்கு ஆதரவளிக்க முன் வந்தார். அதன் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இணைந்து படத்தை தயாரித்தனர்,” என்று வினோத்ராஜ் கூறினார்.

குழந்தை நட்சத்திரமான புகுமுக சிறுவன் செல்லப்பாண்டியும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

Leave a Response