அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா, கூகுள் போன்றவர் – இசையமைப்பாளர் டி இமான்

‘விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ்’ மற்றும் ‘7c ஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “லாபம்”. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி, இயக்குனர் ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் உதவியாளரான ஆலயமணி விழாவிற்கு வருகைத்தந்தவர்களை நெகழ்ச்சியுடன் வரவேற்றார். முன்னதாக மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இசையமைப்பாளர் டி இமான் பேசும்போது,

“லாபம் படத்தில் இயக்குனர் எஸ் பி ஜனநாதனுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதவை. திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்னரே என்னுடைய இசை சார்ந்த முயற்சிகளுக்கு இயக்குனர் ஆர் கே செல்வமணி பெரிதும் ஊக்கமளித்தார். பிறகு படங்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமான பின், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தேன். அந்த தருணத்தில், என்னையும் ஒரு இசையமைப்பாளராக அங்கீகரித்து, என்னுடைய வீட்டிற்கு இயக்குனர் ஜனநாதன் வருகை தந்தார். அந்தத் தருணத்தில் அவர் ‘இயற்கை’ படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் என்னையும், என் திறமையையும் நம்பி வாய்ப்பளிப்பதற்காக வீடு தேடி வந்த முதல் இயக்குனர் ஜனநாதன் சார் தான் என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் “லாபம்” படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பாடல், பாடலுக்கான சூழல், அதற்கான பின்னணி, பாடல் வரிகள், மெட்டு, அதற்கான இசை… இதை கடந்து உலக அரசியலை குறித்து ஆர்வமுடன் விவரிப்பார். அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா கூகுள் போன்றவர்.

இந்தப்படத்தில் ‘சேருவோம் சேருவோம்..’ எனத் தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. இந்த பாடலை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழப் பெண் பாடகி கிளியோபாட்ரா என்பவர் பாடியிருக்கிறார். அது ஒரு ராப் இசை பாடல். இந்தப் பாடலில் எர்க்ஹு (Erhu) என்றொரு இசைக்கருவியின் இசை இடம்பெற்றிருக்கும். இது ஒரு சீன நாட்டை சேர்ந்த வயலின் இசைக்கருவி போன்றது. இந்த பாடல் காட்சியின் போது எர்க்ஹு என்ற இசைக்கருவியை அதே தோற்றத்தில் பயன்படுத்தியிருந்தார். இந்த இசைக்கருவி எப்போது தோன்றியது? அந்த காலகட்டத்தில் அரசியல் மற்றும் சமூக சூழல்? இதனை யார் பயன்படுத்தினார்கள்? எதற்காக பயன்படுத்தினார்கள்? என்ற விவரங்களை எல்லாம், என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, அவர் இதனை ஆழ்ந்து கவனமுடன் கேட்டறிந்தார். ஒரு படைப்பை நூறு சதவீதம் நேர்த்தியாக திரையில் உருவாக்கிய படைப்பாளி ஜனநாதன் சார் என சொல்லலாம்.

பாடல் உருவாக்கத்தின்போதும், மற்றைய தருணங்களிலும், எப்போதும் அவருடன் அவருடைய உதவியாளர் ஆலயமணி உடனிருப்பார்.

அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அனுமதிக்கப்பட்டிருந்த காட்சி எனக்கு உணர்வுரீதியாக இணைந்திருந்தது. ஆகச் சிறந்த மனிதர் அவர் இவ்வளவு விரைவாக நம்மிடமிருந்து பிரிந்து சென்றது சொல்லமுடியாத தாங்க முடியாத இழப்பு. இதனால் மனம் கனக்கிறது.

இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. எந்த கதாபாத்திரம் அவரிடம் வழங்கப்பட்டாலும், அதனை தன்னுடைய பாணியில் வழங்கி, ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பார். அவருடைய அபார நடிப்புத் திறமைக்கு நானும் ஒரு பரம ரசிகன். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, சிறந்த தயாரிப்பாளரும் கூட. தயாரிப்பாளர் ஆறுமுக குமாருடன் இணைந்து இப்படத்தை நேர்த்தியாக தயாரித்திருக்கிறார். இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்’ என்று மனமுருகி பேசினார்.

Leave a Response