சட்டமன்ற தேர்தலை குறிவைத்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி பேசும் படத்தில் நடிக்கும் அரசியல் தலைவர்…

இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு நாடு. மாநிலம், மொழி, இனம் என்று தனித்தனியாக நம் நாடு பிரிக்கப்பட்டு இருந்தாலும் படைப்புகள் என்பது நமக்குள் ஒரு பாலமாக விளங்குகிறது. அதில் முதல் முக்கியமானது தான் திரைப்படத்துறை.

திரைப்படத்தின் மூலமாக நாம் அனைவரும் ஒன்றாகிறோம், ஒற்றுமை வளர்கிறது. மொழியை கடந்து வெவ்வேறு மாநிலத்தவர்கள் வேற்று மொழி மாநில திரைப்படங்களை பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள். எனவே தான் ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசும் நல்ல திரைப்படங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து ஒன்றாக இணைத்து பாராட்டுகிறது.

மேலும் இந்தியில் இருந்து பல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் தெற்கிலும், தெற்கிலிருந்து பல நல்ல திரைப்படங்கள் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி காண்கின்றன. அந்த வகையில் 2016-ம் ஆண்டு இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான “பிங்க்” திரைப்படத்தின் ரீமேக் தான் அஜித் குமார் அவர்கள் நடித்து, சென்ற வருடம் வெளியான “நேர்க்கொண்ட பார்வை”. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த அதே கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு தமிழில் அஜித் குமார் சிறப்பாக நடித்திருந்தார்.

பெண்கள் மீதான சமூக பிரச்சனைகளை கொண்ட அந்த திரைப்படம் இந்தியிலும், தமிழிலும் பெரும் வெற்றியை பெற்றது. “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தை தமிழில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார். தற்போது அவர் சென்ற வருடம் இந்தியில் “Article 15” என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த அந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து தயாரிக்க உள்ளார். “Article 15” திரைப்படம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பற்றிய ஒரு திரைப்படம். தமிழில் போனி கபூருக்கு இது இரண்டாவது படமாக அமைய உள்ளது. அருண் காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியில் ‘ஜீ ஸ்டுடியோஸ்’ சார்பாக தயாரிக்கப்பட்ட அத்திரைப்படம் தமிழில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கதாபாத்திரங்களைப் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Response