பிரபல திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களை காவல் துறையிடம் கோத்துவிட்ட பலே கில்லாடி…

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்த் ஆகியோர் ‘பைன் டெக்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதனை நடத்தி வந்துள்ளனர். ஒரு லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ரூ.5,000 லாபத் தொகை தருவதாகவும், இந்த நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் என ஆள் சேர்த்துவிட்டால், அவர்களுக்கு மாதம் ரூ.2,000 தருவதாக சொல்லி மக்களை மயக்கியுள்ளனர். இத்தொழிலை சேலம், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என விரிவுபடுத்தி நடத்தி வந்துள்ளனர்.

நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்த், தமிழகம் முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பொதுமக்களிடமிருந்து வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் வசூல் செய்த பணத்தை வைத்து, சிங்கப்பூரில் தொழில் தொடங்கியுள்ளாராம் நீதிமணி புல்லியன்.

இது மட்டுமின்றி, சினிமாவில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், தமிழ் சினிமாவில் உள்ள பிரபல தயாரிப்பாளர்களுக்கு இவர்கள் வட்டிக்கு கடனாகவும், திரைப்பட வெளியீட்டில் முதலீடும் செய்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

இவர்கள் இருவரையும் நம்பி பணம் கொடுத்தவர்கள், இவர்கள் ஏமாற்று பேர்வழியாக இருப்பதை அறிந்து காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பெற்ற காவல் துறையினர் நீதிமணி மற்றும் ஆனந்தை கைது செய்துள்ளனர். காவல் துறையினரால் கைது செயப்பட்ட நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்த், ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு சம்மந்தமாக நம்முடைய ‘ஒற்றன் செய்தி’ நிருபர், ராமநாதபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை மற்றும் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்திலும் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார்.

நீதிமணி புல்லியனை விசாரித்த ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர், அவனிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலத்தில், அவனுடைய பெயரிலும், அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் விவரம், அவன் முதலீடு செய்துள்ள தொழில்கள் மற்றும் அவன் யார் யாருக்கு கடன் கொடுத்துள்ளான் என்ற விவரத்தையும் கூறியுள்ளான்.

நீதிமணியின் அந்த வாக்குமூலத்தில், அவன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, பிரபல விநியோகஸ்தர்கள் ‘ராக்போர்ட்’ முருகானந்தம் மற்றும் ‘7ஜி’ சிவா ஆகியோருக்கு பல கோடிகள் கடன் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளான்.

பலே கில்லாடிகளான நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்தை விசாரித்த ராமநாதபுரம் பஜார் காவல் துறையினர், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அதில் நீதிமணி புல்லியனை முதல் குற்றவாளியாகவும்(A 1), ஆனந்தை இரண்டாவது குற்றவாளியாகவும்(A 2) சேர்த்துள்ளனர். நீதிமணி புல்லியன் மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது 406, 420, 294 B மற்றும் 506/2 ஆகிய குற்ற பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சம்மந்தமாக தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, விநியோகஸ்தர்கள் ‘ராக்போர்ட்’ முருகானந்தம் மற்றும் ‘7ஜி’ சிவா ஆகியோரை அடுத்த வாரம் விசாரணைக்கு வரும்படி ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.

ஒருவருடைய தொழிலுக்கு உதவியாக வேறு ஒருவர் கடன் கொடுப்பவராகவோ அல்லது முதலீடு செய்பவராகவோ இருந்தால், அவரை பற்றி நன்கு ஆராய்ந்து பின்னர் உதவி பெறவேண்டும் என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபணமாகிவிட்டது.

இந்த பலே கில்லாடியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை வட்டாரம் சொல்கிறது.

Leave a Response