பொன்மகள் வந்தாள்- விமர்சனம் இதோ..

நாடே ஒரு பெண்ணை கொலைகாரி எனப்பட்டம் சூட்டுகிறது. பதினைந்து வருடங்களுக்குப் பிறகு அந்தப்பெண் கொலைகாரி அல்ல என்று வழக்கறிஞர் வெண்பா வாதாட வருகிறார். அவருக்கு எதிராக பலம் பொருந்திய அதிகாரம் இருக்கிறது. நீதியை மேல் எழ விடாமல் அதிகாரம் தடுக்கிறது. அதை வெண்பா எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே பொன்மகள் வந்தாள்.

வலி, வேதனை, துயரம், ஆற்றாமை, அழுகை, பதற்றம், உறுதி, துணிச்சல், எதிர்ப்பு, அன்பு என அத்தனை உணர்வுகளையும் அப்படியே திரையில் கொண்டு வந்து அபாரமான நடிப்பால் ஜோதிகா மனதில் நிற்கிறார். அவரது மிகை நடிப்பு எப்போதும் துருத்திக்கொண்டு இருக்கும் என்ற விமர்சனத்தை இதில் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளார். வழக்கறிஞர் கதாபாத்திரத்துக்கான கச்சிதமான தேர்வாக, வசனங்களாலும் உடல் மொழிகளாலும் தன்னை நிரூபித்துள்ளார்.

பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்கள் இதில் ஆளுமை செலுத்தியுள்ளனர். தன் வழக்கமான குணநலன்களுடன் கூடிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். பார்த்திபன் நீதிமன்றத்தில் கலாய்க்கும்போது அவருக்கு கவுன்ட்டர் கொடுக்கும் விதத்தில் குருவாக மிஞ்சி நிற்கிறார். ராஜரத்னம் சார் என்று மரியாதையுடன் பார்த்திபனை அழைக்கும் பிரதாப் கே.போத்தன் பின்பு அவரை அடக்கும் விதத்தில் அசாத்திய கம்பீரத்தைக் காட்டுகிறார்.

பாண்டியராஜனுக்குப் படத்தில் பெரிய வேலையில்லை. ஆனாலும், நீதிபதியையே இடித்துரைக்கும் காட்சியில் நியாயத்தின் தராசாக நிற்கிறார். வழக்கமான கதாபாத்திரம் என்றாலும் வில்லத்தனத்தில் குறையில்லாமல் மிரட்டியுள்ளார் தியாகராஜன்.

குழந்தையைப் பறிகொடுத்த துக்கத்தில் ஓலமிடும் செம்மலர் அன்னத்தின் அழுகை இதயத்தில் ஈரம் கசியச் செய்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவும், கோவிந்த வசந்தாவின் இசையும் பின்னணியும் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. ரூபனின் எடிட்டிங் நேர்த்தியின் உச்சம்.

இந்தியா முழுவதிலும் தினம்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும். எத்தனை தீர்ப்புகளை அளித்தாலும். எத்தனை குற்றவாளிகளை தண்டித்தாலும் நிறுத்த முடியவில்லை.

இதனாலேயே இது போன்ற திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு வரவிட்டு இதனை பார்வையிட வைத்து குற்றம் நடப்பதற்கு முன்பே தடுக்கும் முயற்சியாக ஈடுபடுவது மிகச் சிறந்த சமூக சேவைதான்.

அந்த வகையில் பொன்மகள் வந்தாள் ஒரு பொக்கிஷம்

 

‘ஒற்றன்’ துரை’யின் “பொன்மகள் வந்தாள்” வீடியோ திரை விமர்சனம்

Leave a Response