சர்வரிடம் டகால்டி! பின்னணியில் முக்கிய அமைச்சர்?

தலைப்பை பார்த்தவுடன் எந்த ஹோட்டல் சர்வரிடம் யார் டகால்டி கொடுத்தது? யார் அந்த முக்கிய அமைச்சர் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. விஷயம் என்ன என்று பார்ப்போமா!

2017ம் ஆண்டு கென்னன்யா பிலிம்ஸ் சார்பாக ஜெ.செல்வகுமார் தயாரிப்பில் பூஜையுடன் துவங்கப்பட்ட திரைப்படம் ‘சர்வர் சுந்தரம்’. இப்படத்தின் தலைப்பில் முன்பு நாகேஷ் நடித்து அப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.

அதே தலைப்பை கொண்ட படம் என்பதினால், அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.எம் நிறுவனத்திடம் தடையில்லா சான்று பெற்று இந்த புதிய படம் உருவானது.

இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாகவும், வைபவி ஷாந்தில்யா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.மதி செய்ய, தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பினை செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையை அமைக்க புதுமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்க, கென்னன்யா பிலிம்ஸ் சார்பாக ஜெ.செல்வகுமார் தயாரித்துள்ளார்.

சர்வர் சுந்தரம் படம் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக திரைக்கு வராமல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த தாமதத்திற்கு காரணம், படத்தின் தயாரிப்பாளர் அல்ல. இப்படம் தயாரிக்கப்பட்டு, தமிழக வெளியீட்டு உரிமையை வேறு ஒரு புதிய நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் ஐந்து சென்டருக்கு விநியோக உரிமையை பெற்ற விநியோகஸ்தரர், இந்த விநியோக உரிமையை வெளியில் ஒரு பைனான்சியரிடம் அடமானம் வைத்து பல கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். அந்த பணம் திருப்பி தரப்படாததால் ஏற்பட்ட சிக்கலினால் இப்படம் வெளியாகாமல் தவித்து வந்தது. இப்படிப்பட்ட சூழலில் இப்பிரச்சனையை சுமூகமாக தீர்த்த இப்படத்தின் தயாரிப்பாளர் செல்வகுமார், இப்படத்தினை ஜனவரி 31 அன்று உலகெங்கும் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில் சந்தானம் நடித்த வேறு ஒரு படமான ‘டகால்டி’ திரைப்படத்தை அதே ஜனவரி 31 அன்று வெளியிடப்போவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது. இந்த விஷயம் அறிந்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜெ.செல்வகுமார், ‘டகால்டி’ தயரிப்பாளரிடமும், இயக்குநர் விஜய் அனந்திடமும் முறையிட்டு ‘டகால்டி’ படத்தின் ரிலீஸ் தேதியை வேறு ஒரு தேதிக்கு மாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், ‘டகால்டி’ தயாரிப்பாளர்கள் அப்படத்தின் ரிலீஸ் தேதியை மற்றும் எண்ணம் இல்லை என்ற கோணத்தில் ஜனவரி 31 அன்று தான் வெளியிடப்போவதாக படத்தின் விளம்பரத்தை தொடர்கின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ள ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளிவைகும்படி, ‘டகால்டி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம், தமிழகத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் உதவியை நாடியுள்ளனர். அந்த முக்கிய அமைச்சரும், அவருடைய உதவியாளரும், ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைகும்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய தற்காலிக கமிட்டி உறுப்பினர்களிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த முக்கிய அமைச்சரும், அவருடைய உதவியாளரும் இயக்குநர் பாரதிராஜாவை தொடர்புக்கொண்டு ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க, அப்படத்தின் தயாரிப்பாளரிடம் அழுத்தம் கொடுக்கும்படி கேட்டுள்ளனராம். முதலில் இருந்து ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்திற்கு துணையாக நின்று அப்படத்தின் வெளியீட்டுக்கு உதவியாக இருந்த வந்த பாரதிராஜா, ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 31 அன்று வெளியாவதற்கு உறுதுணையாக இருக்கிறாராம். ஆனால் அந்த முக்கிய அமைச்சர் மற்றும் அவருடைய உதவியாளர் கட்டளைக்கு இணங்க, ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் வெளியீட்டுக்கு உதவியாக இருக்கும் பாரதிராஜா பின்வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா!

தற்போது முக்கிய அமைச்சர் மற்றும் அவருடைய உதவியாளரின் தலையீடு தமிழ் சினிமா துறையில் அதிகமாக கோலோச்சி வருவதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் மற்றும் திரையரங்கு சங்கங்கள் ஒரு சாமானிய தயாரிப்பாளருக்கு உதவியாக இல்லாமல் அந்த முக்கிய அமைச்சர் மற்றும் அவருடைய உதவியாளர் கட்டளைக்கு அடிபணிகின்றனர் என்பது தான் தற்போதைய தமிழ் சினிமா சூழல்.

அன்று தமிழ் சினிமாவில் திமுக வைத்தது தான் சட்டமாக இருந்தது. அப்போது அதை அறவே ஒழித்தார் அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா. ஆனால் அதே ஜெயலலிதாவின் சீடர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் குடும்பத்தினர் தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்து ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் முணுமுணுக்கின்றனர்.

இப்போ புரியும் இக்கட்டுரையின் தலைப்பு ‘சர்வரிடம் டகால்டி! பின்னணியில் முக்கிய அமைச்சர்?’ என்ன சொல்கிறது என்று!

Leave a Response