பொன்னியின் செல்வன் – ஒரு பிளாஷ்பேக்! முடிவடைந்த படப்பிடிப்பு!!

அன்றைய தஞ்சாவூர், இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூதாமங்களம் என்னும் கிராமத்தில் 1899ம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று பிறந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தன்னுடைய கல்வியை முடித்த பிறகு சிறுகதைகள், நாவல்கள், சரித்திர காதல் கதைகள், அரசியல் விமர்சனம், சினிமா விமர்சனம் மற்றும் இசையை பற்றிய விமர்சனங்களை எழுதி வந்தார். தன்னுடைய படைப்புகளை, ‘கல்கி’ என்ற தன் பெயரை அடையாளப்டுத்தி எழுதி வந்தார். அவருடைய படைப்புகளில் 120 சிறு கதைகள், 10 சிறிய நாவல்கள், 5 நாவல்கள், 3 சரித்திர காதல் கதைகள் அடங்கும். அவருடைய எழுத்துக்களில் மிக பிரபலமான சரித்திர படைப்புகள் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சிவகாமியின் சபதம்’.

கிருஷ்ணமூர்த்தி, தன்னுடைய புனைப்பெயரான ‘கல்கி’ என்ற பெயரில் தமிழ் இதழ் ஒன்றை 1941ம் ஆண்டு ஆரம்பித்தார். அந்த இதழில், 1950 காலக்கட்டத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்னும் தொடரை எழுதி வந்தார். இத்தொடர் ராஜராஜ சோழனின் இளமை காலங்களை பற்றிய விவரங்களை தொகுத்து எழுதப்பட்டது. இந்த தொடரினை எழுதுவதற்காக, கிருஷ்ணமூர்த்தி மூன்று முறை இலங்கைக்கு சென்று ராஜராஜ சோழன் மற்றும் அவருடைய முன்னோர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வந்தார். இவர் தொடராக எழுதி வந்த ‘பொன்னியின் செல்வன்’, வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, அந்த ‘கல்கி’ இதழின் பிரதிகள் அதிக அளவில் விற்கப்பட்டு வந்தது. 1951 முதல் 1954 ஆம் ஆண்டு காலகட்டத்தில், இந்த ‘பொன்னியின் செல்வன்’ தொடர்கதையை ஐந்து பாகங்களா புத்தகமாக வெளியிட்டார் கல்கி கிருஷ்ணமூர்த்தி. ‘கல்கி’ இதழில் தொடராக வெற்றிபெற்ற ‘பொன்னியின் செல்வன்’, ஐந்து பாகங்களாக வந்த புத்தக வடிவிலும் நல்ல வரவேற்பை பெற்று வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

அந்த காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து வந்த முன்னாள் முதல்வர் காலம்சென்ற எம்.ஜி.ஆர் இந்த கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். அப்போதைய சூழலில் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததினாலும், அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டு வந்த காரணத்தினால் அந்த ஆசையை அவரால் நிறைவேற்றிக்கொள்ள போகாமலே ஆகிவிட்டது. பின்னர் இப்படத்தை பலர் நடிக்க வேண்டும், தயாரிக்க வேண்டும், இயக்க வேண்டும் என ஆசைப்பட்டு வந்தனர். இந்த சூழலில் ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக இயக்க மணிரத்தினம் முடிவு செய்து, அதை பற்றி லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்ல அவர்களும் அதற்கு ஓகே சொல்லி தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதே வேளையில் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இதே ‘பொன்னியின் செல்வன்’ கதையை இணையதள தொடராக தயாரிக்க போவதாக அறிக்கை வெளியிட்டார். ஆனால் இதுநாள் வரை அறிவிப்பு, அறிவிப்பாக மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு வேலையை அமைதியாக முடித்துவிட்டார் புதுமுக இயக்குநர் தவச்செல்வன்.

இயக்குநர் தவச்செல்வன் இதுவரை யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இயக்குநர் தவச்செல்வன் நம்முடன் இப்படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், நடிகர்கள் நடித்து திரையில் தோன்றும் திரைப்படமாக இல்லாமல், அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தின் துவக்க பணிகள் 2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2016ம் ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை ஆரம்பித்த இந்த படக்குழுவினர் 2019ம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு மற்றும் பிரதான தொழில்நுட்ப பணிகளான அனிமேஷன் மட்டும் மோஷன் கேப்ச்சர் பணிகளை முடித்து விட்டனர். இப்படத்தின் போஸ்ட் ப்ரோடாக்ஷன் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எம்.ஜி.ஆர் விரும்பி நடிக்க ஆசைப்பட்ட அந்த கதாபாத்திரத்தை இப்படத்தில் எம்.ஜி.ஆர் உடல்வாகை கொண்டு மோஷன் கேப்ச்சர் மற்றும் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் அவரை வடிவமைத்துள்ளனர். அதே போல் இப்படத்தில் நடிகையும் முன்னாள் முதல்வருமான காலம்சென்ற ஜெ. ஜெயலலிதா அவர்களை அதே தொழில்நுட்பத்தை கொண்டு கதாநாயகியாக வடிவமைத்துள்ளனர்.

இப்படத்தின் அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்ச்சர் பணிகள் அனைத்தும் சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் மேற்கொண்டு, இப்படத்தினை அவர்களே தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. பாடல்கள் அனைத்தையும் மற்றும் இப்படத்தின் வசனத்தையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம், பொன்னியின் செல்வன் புத்தகத்தின் முதல் பாகம் புத்தகத்தின், பாதி புத்தகத்தை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் மொத்த ஐந்து புத்தகங்களை கொண்டு படம் எடுத்தால் அது பத்து படங்களாக உருவாகக்கூடுமாம். இருப்பினும் தவச்செல்வன் இந்த மொத்த ஐந்து பாகங்களான பொன்னியின் செல்வன் புத்தகத்தை கொண்டு ஐம்பது பாகங்களாக திரைபடத்தினை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். தற்போது உருவாகியிருக்கும் முதல் பாகமான ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தவிர்த்து பதினாறு முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனவாம், அவை அனைத்தும் கற்பனையான உருவங்களாம். இப்படம் 90 சதவிகிதம் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதாம். இப்படங்களின் அனைத்து பாகங்களின் கதைகளும் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை நோக்கி போகிறதாம். இப்படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் நான்கு சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் சுமார் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருக்குமாம். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வருகிறது. ஆங்கில மொழியினை தவிர்த்து மற்ற ஐந்து மொழிகளிலும் இப்படம் இந்தாண்டு மே…. ஜூன் மாதங்களில் உலகெங்கும் வெளியாக உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் தவச்செல்வன் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Response