சைக்கோ படத்தின் இயக்குநர் மிஷ்கின் மீதுள்ள வழக்கு திசை திருப்பப்படுகிறதா?

மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என்று விளம்பரம் செய்யப்பட்டு வரும் திரைப்படம் ‘சைக்கோ’. இப்படத்தினை டபுள் மீனிங் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஷயம் என்னவென்றால், ஏ.வி.எம் ப்ரோடுக்ஷன்ஸ் குடும்ப உறவினரான மைத்ரேயா என்பவரிடம் சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தின் கதையினை மிஷ்கின் சொல்லியுள்ளாராம். கதையை சொன்னது மட்டுமல்லாமல் இப்படத்தில் மைத்ரேயாவை கதாநாயகனாகவும் நடிக்க வைப்பதாக சொல்லி உள்ளாராம் மிஷ்கின். அப்படிப்பட்ட அந்த திரைப்படத்தை மைதயாவின் தந்தையான ஆர்.ரகுநந்தன் தன்னுடைய ட்ரான்ஸ்வர்ல்டு டெலிகம்யூனிகேஷன்ஸ் சார்பாக தயாரிக்க அதற்க்கான ஒப்பந்தமும் மிஷ்கின் மற்றும் ரகுநந்தன் இடையே போடப்பட்டு மிஷ்கினுக்கு ரூபாய் ஒரு கோடி முன்பனமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிஷ்கின் காரணமாகவோ, ரகுநந்தன் காரணமாகவோ அல்லது மைத்ரேயா காரணமாகவோ யாரோ ஒருவரின் காரணமாக இப்படம் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. ஒப்பந்க்ம் போடப்பட்டு சில மாதங்கள் கழித்து சைக்கோ திரைப்படம் விளம்பரங்கள் வெளியாகின. இந்த திரைப்படத்தில் உதயநிதி கதாநாயகனாவும், மிஷ்கின் இயக்குநராகவும், டபுள் மீனிங் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

உதயநிதி நடிக்கும் இந்த சைக்கோ திரைப்படத்தின் செய்திகள் வெளியாகியவுடன், மிஷ்கினுடன் முதலில் ஒப்பந்தம் போட்ட ஆர்.ரகுநந்தன் மிஷ்கின் மீது வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “தான் மிஷ்கினுடன் போட்ட ஒப்பந்தத்தில், தன்னுடைய மகனான மைத்தேர்யாவை கதாநாயகனாக போட்டு, இதே சைக்கோ கதையை மிஷ்கின் இயக்குவதா குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த படத்தை அவர் தன்னுடைய நிறுவனத்தில் தன் மகன் மைத்ரேயாவை வைத்து ஆரம்பிக்காமல், அதே கதையை வேறு ஒருவரை கதாநாயகனாக வைத்து வேறு ஒரு நிறுவனத்தில் இயக்குகிறார் மிஷ்கின். எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.” எனவும் அந்த மனுவில் ரகுநந்தன் தெரிவித்திருந்தார். அப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சைக்கோ திரைப்பட படப்பிடிப்புக்கு இடைக்கால தடை விதித்தார். பிறகு இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் நடந்த சுமுக பேச்சுவார்த்தையில், ரகுநந்தன் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து பெற்ற ரூபாய் ஒரு கோடி பணத்தை மூன்று தவணையில் இதே நீதிமன்றத்தில் கட்டி விடுவதாக மிஷ்கின் ஒப்புக்கொண்டார், அதற்கு ரகுநந்தன் சம்மதமும் தெரிவித்தார்.

ஒப்பந்தப்படி மிஷ்கின் முதல் தவனைக்கான ரூபாய் ஐம்பது லட்சத்திற்கும், இரண்டாவது தவனையான ரூபாய் இருபத்தைந்து லட்சத்திற்கும், மூன்றாவது தவனையான ரூபாய் இருபத்தைந்து லட்சத்திற்கும் என மொத்தம் ரூபாய் ஒரு கோடிக்கான மூன்று காசோலையை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார். நீதிமன்றம் மூலமாக ரகுநந்தன் நிறுவனத்திற்கு மிஷ்கின் வழங்கிய அந்த மூன்று காசோலைகளும் வங்கியில் பணமின்றி திருப்பி அனுப்பட்டுள்ளது.

மிஷ்கின் வழங்கிய மூன்று காசோலைகளும் பணமின்றி திரும்பியதால், ஆர்.ரகுநந்தன் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விடுத்த உத்திரவினால், முதல் தவனைக்கான ரூபாய் ஐம்பது லட்சத்தை ரகுநந்தன் நிறுவனத்திற்கு நீதிமன்றம் மூலமாக திருப்பி செலுத்திவிட்டார் மிஷ்கின். வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்ட மற்ற இரு காசோலைகளுக்கான ஐம்பது லட்சத்தை திருப்பி தந்துவிடுவதாக மிஷ்கின் நீதிமன்றத்தில் மீண்டும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் சொன்னதை போல் அந்த மீதி தொகையான ஐம்பது லட்சத்தை திரும்பி தராததால் ரகுநந்தன் தரப்பினர் மீண்டும் நீதிமன்றத்தை நாடினர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் எம்.சுந்தர் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது, சைக்கோ திரைப்படத்தை இயக்கியுள்ள மிஷ்கினுக்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுள் மீனிங் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் ஏதாவது சம்பள பாக்கி, அல்லது வேறு ஏதாவது வகையில் மிஷ்கினுக்கு பண பாக்கி வைத்திருந்தால் அந்த பணத்தை இயக்குநர் மிஷ்கினுக்கு அந்த நிறுவனம் வழங்குவதற்கு தடை விதித்து அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார் நீதியரசர் எம்.சுந்தர்.

இந்த வழக்கு விஷயமாக தயாரிப்பாளர் ரகுணந்தனின் மகன் மைத்ரேயாவிடம் விசாரித்தோம். நீதிமன்றம் உத்தரவிட்டபடி இயக்குநர் மிஷ்கின் அந்த மீதி தொகையான ரூபாய் ஐம்பது லட்சத்தை இதுவரை திருப்பி தரவில்லை என்றார். இதன் காரணமாக மீண்டும் நீதிமன்றத்தை நாடி மிஷ்கின் கொடுக்க வேண்டிய ரூபாய் ஐம்பது லட்சத்தை பெற்று தரும்படியும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் மைத்ரேயா தெரிவித்தார்.

சைக்கோ திரைப்பட இயக்குநர் மீது வழக்கு இப்படி இருக்க, சைக்கோ சம்மந்தமாக வழக்கு இருப்பதாக ஊடகங்களில் தவறான தகவல்கள் சொல்லப்படுவதாகவும், அப்படி இனி சைக்கோ சம்மந்தமாக தவறான செய்திகள் ஏதாவது வெளியானால் சம்மந்தப்பட்ட ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சைக்கோ தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் பத்திரிகை செய்து வெளியிட்டுள்ளார்.

சைக்கோ இயக்குநர் மிஷ்கின் பற்றிய உண்மை செய்தி ஊடகங்களில் வெளியாவதால், சைக்கோ படத்திற்கு வியாபார ரீதியாக பாதிப்பு ஏற்படுமோ என்ற காரணத்தினால் இப்படி ஒரு பத்திரிகை செய்தியை தயாரிப்பு நிறுவனம் தனது வழக்கறிஞர் மூலமாக வெளியிட்டு பத்திரிகையாளர்களை திசை திருப்புகிறார்களோ என சந்தேகம் எழுகிறது!

மிஷ்கின் மீது இந்த வழக்கு தொடர்வதால், சைக்கோ படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலினும், தயாரிப்பு நிறுவனமும் மிஷ்கின் மீது கோபத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.




Leave a Response