ஒதுங்குவது பாய்வதற்கு ! பூனையா, புலியா ? பொறுத்திருந்து பார்ப்போம்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாம்பியன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இதில், நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார்.

கென்னடி கிளப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் சாம்பியன். கபடியை மையப்படுத்தி வெளியான கென்னடி கிளப் படத்தைத் தொடர்ந்து, கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இதில், விஸ்வா, மிருணாளினி ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். மேலும், நரேன், ராமர், விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில், இயக்குநர் பாரதிராஜா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி ராஜேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டி ராஜேந்தர் கூறுகையில், “நான் ஒரு பார்வையாளராகத் தான் வந்தேன். ஆனால், என்னை பேச அழைத்துவிட்டார்கள். இப்போதெல்லாம், எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வதில்லை. அதிலிருந்து ஒதுங்கிக்கொண்டிருக்கிறேன். நான் ஒதுங்குவது பாய்வதற்கு” என்று அவர் கூற கரகோஷங்கள், கைதட்டல்கள் சத்தம் தான் கேட்டது. டி .ஆர் . சொல்வது நிச்சயம். ஆனால், பூனையை போலவா அல்லது புலியை போல பாயப்போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் அவர் பேசும்போது,
“இந்த தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் கூட எனக்கு பிடித்திருக்கிறது. இது வரை தமிழில் தான் தலைப்பு வைக்கப்பட்டது. இதற்கு முன்னுதாரணமாக இருந்தவர் இயக்குநர் பாரதிராஜா. தமிழில் தான் டைட்டில் வைப்பேன் என்று விடாப்பிடியாக இருந்து இதுவரை தமிழை கட்டிக்காப்பாற்றியுள்ளார். என்னால் முடியும் என்று மோதி ஜெயிப்பவன் தான் ‘சாம்பியன்’. முடியுமா…முடியுமா என்று முடங்கி கிடப்பவன் சோம்பியன். சினம் கொண்ட எழுந்திருப்பவன் செம்பியன்…என்றார். என்னால் முடியும் என்பதற்காக ஒரு இடத்திற்கு மோத செல்கிறேன். நீ செல்லும் வழியில் என்னை வந்து சந்தித்து விடு என்று அழைத்ததால் இந்த சாம்பியன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்.

இறுதியில், இந்த சத்யம் திரையரங்கை என்னால் மறக்க முடியாது. “மைதிலி என்னை காதலி” என்ற படத்தை திரையிட்டு கிட்டத்தட்ட 100 நாட்கள் ஓட வைத்த திரையரங்கம். நானே சத்தியத்திற்காக போராடுபவன்… சத்யம் திரையரங்கிற்கு வராமல் இருப்பேனா..

டி ராஜேந்தர் கொடுக்க மாட்டேன் வாக்கு.

கொடுத்துவிட்டால் பிறழாது நாக்கு..

சொல்லமாட்டேன் போக்கு..

தம்பியோட தாடி அடர்த்தி, நல்ல வளர்த்தி..

ஆனால், என்னோட தாடி எதுல சேர்த்தி… நல்ல நேர்த்தி

உங்களுடைய எண்ணங்கள் எல்லாமே ஆக வேண்டும் பூர்த்தி” என்று நன்றி கூறி அங்கிருந்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் உடன் புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response