பல இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்ட எனக்கு சுசீந்திரன் வாழ்க்கை கொடுத்தார்! – புதுமுக நாயகன் பெருமிதம்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வருவது பேய் படம் மற்றும் ஸ்போர்ட்ஸ் படம். இந்த ஸ்போர்ட்ஸ் பட வரிசையில் சமீபத்தில் வெளிவந்த கனா, பிகில், ஜடா என சில படங்கள் வந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் வரவிருக்கும் திரைப்படம் “சாம்ப்பியன்”.

இப்படத்தில் அறிமுக நாயகன் விஷ்வா, ‘சித்திரம் பேசுதடி’ நரேன், கதாநாயகிகளாக டப்ஸ்மாஷ் மிர்னாலினி, மற்றும் அறிமுக நாயகி சௌமிகா பாண்டியன், மனோஜ் பாரதி, ஸ்டண்ட் சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களை கபிலன், விவேகா மற்றும் மோகன் ராஜன் எழுத அரோல் கரோலி இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, தியாகு படத்தொகுப்பினை செய்துள்ளார். வசனங்களை வெங்கட்ராஜ் எழுத, கதை மற்றும் திரைக்கதை எழுதி சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தினை பற்றி நாயகன் விஷ்வா அவருடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
விஷ்வா நம்மிடம் பேசியதாவது, “நான் 3-7 வயது வரை நீச்சல் கற்றுக்கொண்டேன். பின்னர் ஸ்குவாஷ் விளையாட்டை கற்றுக்கொண்டு, 15 வயது வரை விளையாடினேன். பிறகு எனக்குள் ஒரு உள்ளுணர்வு… சினிமாவில் சேர்ந்து பணம், புகழ் என சம்பாதித்து சாதிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது. நான் குறும்படங்கள் சில எடுத்தேன்.

12 ஆம் வகுப்பு முடித்தவுடன் கலிபோர்னியா சென்று, ‘நியூயார்க் பிலிம் அகாடெமியில்’ 4 வருடம் பிலிம் மேக்கிங், ஆக்ட்டிங் போன்றவற்றை பயின்று இந்தியா திரும்பினேன். இங்கு வந்ததும் சீனு ராமசாமி சார், பாலா போன்ற இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்தேன். புதுமுகம் என்பதால் எனக்கு யாரும் நடிக்க வாய்ப்பளிக்கவில்லை.

Actor Vishwa @ Champion Movie Audio Launch Stills

பின்னர் என் தாய் என் முயர்ச்சியினை பார்த்து, ஒரு புரொடக்ஷன் கம்பெனியை ஆரம்பித்தார். எனது மாமா நடிகர் திரு.ஆர்.கே.சுரேஷ் ‘ஸ்டூடியோ 9’ என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். சினிமாவில் எனக்கு தெரிந்த ஒரே நண்பர் நடிகர் சூரி அவர்கள். அவர் இயக்குநர் சுசீந்திரனிடம் என்னை
அறிமுகப்படுத்திவைத்தார். அவர் என்னை பார்த்துவிட்டு, கால்பந்தாட்டம் பற்றி ஒரு படம் எடுப்பதாகக் கூறி அதற்கு என்னை பயிற்சி எடுக்குமாறு சொன்னார். பின்னர் புழல் கால்பந்தாட்ட மைதானம் சென்று ஐ சி எப் சாந்தகுமார் என்பவரிடம் ஒரு வருடம் பயிற்சி எடுத்தேன். என் வளர்ச்சியை பார்த்த இயக்குநர் சுசீந்திரன், என்னை வைத்து படம் எடுக்க முன்வந்தார்.

வடசென்னையில் வாழும் ஒரு ஏழ்மையான கால்பந்தாட்ட வீரர் பற்றிய கதை தான் “சாம்பியன்”. தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக மகன் போராடுகிறான். எனக்கு தந்தையாக மனோஜ்பாரதி சார் நடித்திருக்கிறார். நடிகர் நரேன் எனக்கு பயிற்சி அளிக்கும் கோச்சாக வருகிறார். இப்படத்தில் எனக்கு ஜோடியாக சௌமிகா மற்றும் மிர்னாலினி ஆகிய இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்தப்படம் புழல், ராயபுரம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு படத்தின் நாயகன் விஷ்வா நம்மிடம் தெரிவித்தார்.

டிசம்பர் 13 அன்று “சாம்பியன்” திரைப்படம் உலகெங்கும் வெளியாகிறது.

Leave a Response