கூர்கா திரை விமர்சனம்…

இனி நாயகனாக நடிக்கப் போவதில்லை என தர்மபிரபு படம் வெளியான போதே சொல்லியிருந்தார் யோகிபாபு. அவர் அப்படி சொன்னதற்கான காரணம் மக்களுக்கு இப்போது வேண்டுமானால் புரியலாம். மொத்த படத்தையும் தாங்கிப் பிடிப்பது என்பது ஒரு அசாத்தியமான வேலை. முந்தைய படத்தில் அதை செய்ய தவறிய யோகிபாபு, 2:30 மணி நேர கூர்கா படத்தில் நாயகனாக அதை செய்தாரா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, உடல் ஒத்துழைக்காததால், காவல்துறையில் சேர முடியாமல், சக்திமான் செக்யூரிட்டி சர்வீஸில் பணியில் சேரும் பகதூர் பாபுவும், இன்ஸ்பெக்டர் போலீஸ் வேலைக்காக ஆசையாக வளர்த்த தன்னுடைய நாய் ஒரு சோம்பேறி என தெரிந்ததும் துரத்தி விட, அதற்கு பகதூர் பாபு தஞ்சம் அளிக்கிறார். யோகிபாபு செக்யூரிட்டியாகப் பணி புரியும் மெட்ராஸ் மாலை, தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, அதில் பிணைக்கைதிகளாக மக்களை வைத்து, 200 கோடி பணம் கேட்கிறார்கள். அங்கு சிக்கிக் கொள்ளும் மக்களை கூர்கா பகதூர் பாபுவும், நாயும் எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பது தான் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் யோகிபாபு இந்த படத்துக்காகவே நேரம் ஒதுக்கி மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். சில இடங்களில் காமெடி நன்றாகவே இருந்தாலும், பல இடங்களில் மற்றவரின் உடலை அசிங்க்ப்படுத்தி ஆமை வாயா, பன்னி மூஞ்சி, நல்லி எலும்பு என செய்யும் காமெடிகள் சகிக்கவில்லை. அதற்கும் கைதட்டும் ஒரு சில ரசிகர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. யோகிபாபுவே இந்த வசனங்களை எல்லாம் தன்னிச்சையாக பேசியிருந்தால் இயக்குனர் இந்த படத்தில் என்ன வேலை பார்த்தார் என்பது தெரியவில்லை.

சார்லி போன்ற ஒரு நல்ல நடிகருக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைக்காமல் போனது துரதிருஷ்டம். அமெரிக்க தூதரக அதிகாரி மார்க்ரெட்டாக எலிசா நடித்துள்ளார். தன் வேலையை செவ்வனே செய்துள்ளார். வில்லன் ராஜ்பரத் கச்சிதம். அவர் தோற்றம், செய்கை, உடல்மொழி என அனைத்திலும் தான் யார் என சொல்லி விடுகிறார். ஆனந்தராஜ் போன்ற ஒரு தேர்ந்த நடிகர், திரையில் தோன்றும்போதே ரசிகர்கள் உற்சாகம் அடைகிறார்கள். தன் பங்குக்கு சிரிக்க வைத்திருக்கிறார் இந்த RDX அலெக்ஸ். ரவிமரியா கதாபாத்திரம் ஓவர் சவுண்டு. ஒரு சில இடங்களை தவிர, நம்மை எரிச்சலாக்குகிறது.

படத்தின் முதற்பாதி சுமார் ரகம் தான். போலீஸ் ட்ரெயினிங் காட்சிகள், யோகிபாபு ஓபி அடிக்கும் காட்சிகள் என படம் இம்சையாய் தொடங்குகிறது. படத்தின் இரண்டாம் பாதி மெல்ல வேகமெடுத்து நகைச்சுவை விருந்துக்கு உத்திரவாதம் அளிக்கிறது. படம் பார்க்கும்போது ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக வைத்து படத்தை எடுத்திருப்பது கண்கூடு. வில்லன் ராஜ்பரத் வந்த பிறகு கதை பயணிக்க முற்பட்டாலும், அதற்கு அணை போடுவதும் காமெடிகள் தான். வில்லன் போர்ஷனை சீரியஸாகவும், சுவாரசியமாகவும் எழுதியிருந்தும், அதை செயல்படுத்துவதில் குழம்பியிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன். மொத்தத்தில் குடும்பத்தோடு திரையரங்குக்கு சென்றால் நன்றாக சிரித்து விட்டு வரலாம்.

Leave a Response