மூன்று கேள்விகளுக்கு முதலமைச்சர் இதுவரை பதிலளிக்கவில்லை – ஸ்டாலின்..!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனால் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேள்விகள் எழுப்பியதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் அவர் அளிக்கவில்லை என்றும் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்ததற்கும், ஆறுமுகசாமி ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது ஏன் என்பதற்கும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளிகள் மிரட்டியது ஏன் என தான் கேட்ட மூன்று கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி, இதுவரை பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார். மேலும், தூத்துக்குடி – சென்னை இடையே புதிய ரயில் இயக்கப்படும் எனவும், ஒட்டபிடாரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய போக்குவரத்து பணிமனை அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Leave a Response