தும்பா படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய KJR ஸ்டுடியோஸ்..!

அனிருத் ரவிச்சந்தர் மற்றும் டைக்ரஸ் தும்பா நடித்த “தும்பா” விளம்பர வீடியோ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு லட்சக்கணக்கான பார்வைகளை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை நெருங்குவதை ஒட்டி, குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் ஏற்கனவே படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் பெற்றிருக்கிறார்.
ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்கள் இது பற்றி கூறும்போது, “நாங்கள் இந்த படத்தை ஆரம்பித்தபோது, எங்கள் இயக்குனரின் திரைக்கதை மற்றும் அவரது நோக்கத்தின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்தோம். இந்த படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக, குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் படமாக இருக்கும் என நம்பினோம். படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்த கோட்டபாடி ஜே ராஜேஷ் சார், படத்தின் உரிமைகள் வாங்க முன்வந்தார். நாங்கள் KJR ஸ்டுடியோவுடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் தும்பா உலகம் முழுக்க உள்ள அனைத்து ரசிகர்களிடையே சென்று சேரும் என நாங்கள் நம்புகிறோம்” என்றனர்.
தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது, “தும்பா ஒரு சுவாரஸ்யமான படம். இதுவரை பார்த்திராத ஒரு படம். இந்த படத்தின் கரு, அது எடுக்கப்பட்ட விதம், VFX என இந்த ஆண்டு வெளியாகும் எங்களின் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமான படமாக இருக்கும். இந்த படத்தின் சில காட்சிகளை பார்த்தபோது, எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, அதனால் இந்த படத்தை வாங்க கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை. அனிருத், விவேக் மெர்வின், இயக்குனர் ஹரிஷ் ராம் & தயாரிப்பாளர் என எனக்கு மிகவும் பிடித்த பலருடன் இந்த ஒரே படத்தில் இணைவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தும்பா படத்தை உலகமெங்கும் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், படம் நிச்சயம் வெற்றியடையும் என நம்புகிறேன்” என்றார்.
இயக்குனர் ஹரிஷ் ராம் LH கூறும்போது, “KJR ஸ்டுடியோஸ் போன்ற ஒரு மிகச் சிறந்த மற்றும் புகழ்பெற்ற ஒரு தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் எங்கள் படத்துடன் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கோட்டபாடி ஜே ராஜேஷ் சார் ஒரு தயாரிப்பாளராகவும், வினியோகஸ்தராகவும் குடும்ப பார்வையாளர்கள் விரும்பும் படங்களை தருவதில் முன்னோடியாக விளங்குகிறார். KJR ஸ்டுடியோஸின் மூலம் ‘தும்பா’ படம் மக்களிடம் பெரிய அளவில் மிகச்சிறப்பாக சென்று சேரும் என தும்பா குழுவினர் அனைவரும் நம்புகிறோம்” என்றார்.
அட்வென்ச்சர், ஃபேண்டஸி படமான தும்பாவில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் தீனா ஆகியோருடன் பிரபலமான நடிகர்கள் சிலரும் நடிக்கிறார்கள். ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP பேனரில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார் சுரேகா நியாபதி.

Leave a Response