மேலும் 4 பெண்கள் புகார், அர்ஜுனுக்கு எதிராக ஆதாரம் என்னிடம் இருக்கு : ஸ்ருதி ஹரிஹரன்..!

நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கப் போவதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

நிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை அர்ஜுன் மறுத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

ஒத்திகைக்கு வர மாட்டேன், நேராக டேக்கிற்கு தான் வருவேன் என்று இயக்குனரிடம் அப்பொழுதே தெரிவித்தேன். அப்போது எனக்கு தைரியம் இல்லை. தற்போது மீ டூ இயக்கத்தால் தைரியம் வந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் பற்றி பலரும் தற்போது தான் வெளியே சொல்கிறார்கள். எனக்கு ஒரு ஆண்டு ஆனது.

ஏன் தற்போது தான் புகார் தெரிவிக்கிறீர்கள் என்று கேட்காமல் சம்பவத்தின் மீது கவனம் செலுத்தலாமே. சம்பவம் நடந்தபோது என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. என்னை டின்னருக்கு அழைத்ததுடன் நான் மறுத்தும் மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தார். எனக்கு பயமாகிவிட்டது. நான் தர்ஷன், சுதீப் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளேன். அவர்கள் அர்ஜுன் போன்று இல்லாமல் மரியாதையுடன் நடந்து கொண்டனர்.

நான் மட்டும் அல்ல மேலும் நான்கு பெண்களும் அர்ஜுன் மீது புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை. தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதும் அதை மீடியாவிடம் காண்பிக்கிறேன். என்னிடம் ஆதாரம் உள்ளது. அதை நான் நீதிமன்றத்தில் சமர்பிப்பேன்.

சம்பவம் குறித்து பேசக் கூடாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்த சம்பவம் நடந்த பிறகு நான் அர்ஜுனுக்கு எந்த மெசேஜும் அனுப்பவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். தங்களை சூப்பர் ஸ்டார்கள் என்று அழைப்பவர்கள் பாவப்பட்டவர்களிடம் தவறாக நடக்கிறார்கள் என்கிறார் ஸ்ருதி.

Leave a Response