திமுகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் – உடன்படிக்கை கையெழுத்து..!

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. தேர்தலில் 2 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டு வந்தது.இது தொடர்பாக உடன்பாடு ஏற்படாத நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இரு கட்சி தலைவர்கள் நடுவே நடைபெற்றது.

அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொல்.திருமாவளவன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். அங்கு திமுக சார்பில் தொகுதி பங்கீடு குழுவைச் சேர்ந்த துரைமுருகன், டிஆர் பாலு, எ.வ.வேலு உள்ளிட்டோருடன், திருமாவளவன் மற்றும் விசிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் இந்த ஆலோசனையின் போது உடன் இருந்தார்.

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யவாதக முடிவு அறிவிக்கப்பட்டது. சிதம்பரம் தவிர விழுப்புரம் அல்லது திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் தொகுதி பெயர்கள் இப்போது வெளியிடப்படவில்லை.

தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், நிருபர்க ளிடம் அதுகுறித்து தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றியும், நாங்கள் போட்டியிட உள்ள சின்னம் பற்றியும் பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும். நாங்கள் ஏற்கனவே பல தேர்தல்களில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். ஆனால், கூட்டணி நலன் காரணமாக எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது பற்றி கலந்து பேசுவோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

Leave a Response