தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயற்சித்த “விஷால்” ஆதரவாளர்களுடன் கைது..!

சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்த காரணத்தால் நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார். விஷாலுடன் மன்சூர் அலிகான் மற்றும் விஷால் ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விஷால் விலக வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயில் விஷால் முறைகேடு செய்துவிட்டதாக 150க்கும் அதிகமான உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட முக்கிய தயாரிப்பாளர்கள் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

நேற்று இவர்கள் 150 பேரும் சேர்ந்து தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். அதேபோல் அண்ணா சாலையில் உள்ள இன்னொரு தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கும் பூட்டு போட்டனர். இதனால் நேற்று மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு இன்று விஷால் வந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வந்தார். உள்ளே சென்று தனது பணிகளை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இதனால் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் விஷால் – போலீசார் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அலுவலக வாசலில் நிற்கும் போலீசாருடன் விஷால் வாக்குவாதம் செய்தார். பூட்டை உடைக்க விஷால் முயற்சி செய்தார். ஆனால் போலீஸ் சாவி வைத்து வேண்டுமானால் திறந்து கொள்ளலாம் என்று கூறினர். ஆனால் பூட்டை உடைத்துதான் உள்ளே நுழைவேன் என்று விஷால் உறுதியாக இருந்தார்.

இதனால் போலீஸ் விஷால் இடையே வாக்குவாதம் முற்றியது. பூட்டை அகற்ற முயற்சித்ததற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் விஷால் தொடர்ந்து வாக்குவாதம் செய்தார். விஷாலின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்ப துவங்கினார்கள்.

சங்க அலுவலகத்துக்கு உள்ளே சென்றே தீருவேன். என்ன ஆகிறதோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று விஷால் கோபமாக பேசினார். இதனால் விஷாலை கைது செய்ய நேரிடும் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்தனர். தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது, சட்டவிரோதமாக இங்கு கூடியதாக கைது செய்ய நேரிடும் என்று உதவி ஆணையர் கோவிந்தராஜூ எச்சரிக்கை விடுத்தார்.

சாவியை வைத்து பூட்டை திறக்க அனுமதிக்க முடியாது; உடைத்தே தீருவேன் என்று விஷால் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தார். அதோடு சங்க விவகாரத்தில் காவல்துறை தலையிட வேண்டாம் என விஷால் கூறினார். விஷால் தொடர்ந்து வாக்குவாதம் செய்த காரணத்தால் அவரை போலீசார் கைது செய்தனர். உதவி ஆணையர் கோவிந்தராஜூ உத்தரவின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Response