ஜெயலலிதா நினைவிடம் : மார்ச் மாதம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு, திறக்கப்படும் – தமிழக அரசு..!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு உள்ளேயே அடக்கம் செய்யப்பட்டது. 50 கோடி ரூபாய் செலவில் 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகமும் அமைக்கப்படவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. டெண்டர் பணிகளும் நிறைவடைந்து நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டு‌வதை‌ தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி என்பவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் ‌சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டினால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என மனுவில் கூறப்‌பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து அனுமதியும் பெற்று நினைவிடம் கட்டுப்பட்டு வருவதாகவும், 90 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவு‌ம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும்‌ மார்ச் மாதம் முழுமையாக முடிக்‌கப்பட்டு, திறக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்ப‌ட்டது. இதனையடுத்து இருதரப்பு வாத‌ங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

 

Leave a Response