நான் திமுகவில் இணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்-அழகிரி..!

திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்கிறேன் என அழகிரி கூறிய விவகாரம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகிரியை திமுகவில் சேர்த்துக்கொள்ளும் முடிவில் ஸ்டாலின் இருப்பது போல் தெரியவில்லை. எனவே, தன்னுடைய பலத்தை காட்டும் வகையில், திமுகவில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்தில் இருந்து கருணாநிதி சமாதிவரை ஒரு பிரம்மாண்ட பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார்.

அதற்காக, திமுகவில் ஸ்டாலினை பிடிக்காதவர்களையும், அவரால் ஓரங்கப்பட்டவர்களையும் தன் பக்கம் வளைக்கும் முயற்சியில் அழகிரி தரப்பு ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பல வருடங்களாக கட்சியில் இருந்தும் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களை அழகிரி தரப்பு குறிவைத்துள்ளது. இதை தெரிந்து கொண்ட ஸ்டாலின் தற்போது திமுகவில் ஓரங்கட்டப்பட்ட பலரையும் வரவழைத்து அவர்களுக்கு பதவி கொடுத்து வருகிறாராம். ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை அழகிரி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதவி பெறாதவர்கள் கூட அழகிரி தொடர்பு கொள்ளும் போது ‘ உங்க மேல மரியாதை இருக்கு.. ஆனா அதுக்காக தளபதிக்கு எதிரா எங்களால் செயல்பட முடியாது.

கடைசி வரைக்கும் திமுக தொண்டர்களாக இருந்து விட்டு போகிறோம். மன்னித்து விடுங்கள்’ எனக்கூறி போனை கட் செய்து விடுகிறார்களாம். இது அழகிரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த்தியது.

அதுபோக, செப் 5ம் தேதி நடக்கும் பேரணியில் கலந்து கொள்ள அறிவுநிதி, மற்றும் ஸ்டாலினின் சகோதரி செல்வி உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களை அழகிரி அழைத்தாரம். ஆனால், நீங்களும், ஸ்டாலின் ஒன்றாக செயல்பட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டோம்.

ஆனால், அது நடக்கவில்லை. நீங்கள் நடத்தும் பேரணியில் நாங்கள் கலந்து கொண்டால் ஸ்டாலின் வருத்தப்படுவார். அவரை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. குடும்ப விழா என்றால் அழையுங்கள்.

உடனே வருகிறோம். ஆனால், உங்களுக்கும், ஸ்டாலினுக்கும் இடையேயான அரசியலில் எங்களை இழுக்காதீர்கள் எனக்கூறி விட்டார்களாம். இப்படி அனைவரும் நழுவியதால் அழகிரி கலக்கம் அடைந்துள்ளார். அதனால்தான், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நான் திமுகவில் இணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

ஆனால், ஸ்டாலின் அதை விரும்பவில்லை. என்னை திமுகவில் இணைத்துக்கொண்டால் அவரை தலைவராக ஏற்க தயாராக இருக்கிறேன்” என அவர் இறங்கி வந்தார் எனக்கூறப்படுகிறது.

Leave a Response