ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் தீர்மானம்..

நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்தாலும் சில நகரங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் 7 ஆயிரத்து 500 ரூபாயும், மாநில அரசின் சார்பில் 5 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கிட வேண்டுமென திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்குமென தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டுமெனவும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட 11 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Response