மக்களுக்கு எதிர்ப்பு இல்லாத ஆட்சியைக் கலைக்க நாங்கள் விரும்பவில்லை-தம்பிதுரை..!

மோடி அரசு கலைய வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா. மக்களுக்கு எதிர்ப்பு இல்லாத ஆட்சியைக் கலைக்க நாங்கள் விரும்பவில்லை” என தம்பிதுரை விளக்கமளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, மத்திய அரசில் 4 ஆண்டுகள் அங்கம் வகித்த தெலுங்குதேசம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததால்தான் அதை நாங்கள் ஆதரிக்கவில்லை.

காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர நாங்களே முயன்றோம். இதற்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கேட்டோம். அப்போதுஅவர்கள் ஆதரவளிக்கவில்லை. எந்த பிரச்சினைக்காக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டோமோ அந்த பிரச்சினைக்கு மத்திய அரசே தீர்வு ஏற்படுத்தியுள்ளது. அதாவதுகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. மோடியின் அரசு 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, ஆட்சியைக் கலைப்பதற்கோ கவிழ்ப்பதற்கோ முயற்சி செய்வது மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கும் எனக் கருதுகிறோம். மோடி அரசு கலைய வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா. மக்களுக்கு எதிர்ப்பு இல்லாத ஆட்சியைக் கலைக்க நாங்கள் விரும்பவில்லை எனப் பேசினார்.

மேலும் பேசிய அவர்,தமிழகத்திற்கும் அதிமுக ஆட்சி ஐந்து ஆண்டுக்கு நடக்கும். இது ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி. ஆட்சியைக் கலைப்பதற்கு யார் சதி செய்தாலும் அதை நாங்கள் தடுப்போம். ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.

Leave a Response