தமிழக மக்கள் தேட வேண்டியது தலைமை பண்புகள் மிக்க தலைவனை, அரசனை அல்ல-கமல்ஹாசன்..!

தேச விரோதி என்ற வார்த்தையை அரசின் எந்த திட்டத்தோடு முரண்பட்டாலும் பயன்படுத்தக் கூடிய வார்த்தையாக பயன்படுத்துகிறார்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சில் ஒன்றில் பங்கேற்றுள்ள கமல்ஹாசன் தனது கட்சி குறித்தும் தமிழக அரசியல் நிலை குறித்தும் பேசினார்.

தமிழக மக்களுக்கு தற்போது அரசியல் கட்சிகள் செய்து வருவதை விட சிறந்த சேவையை தன்னால் செய்ய முடியும் என்றும் மக்கள் அரசுகளிடம் இருந்து பெரிய அளவில் எதையும் எதிர்பார்க்காவிட்டாலும் அவர்கள் எதிர்பார்ப்பது கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றார். மேலும் தான் சாலையில் வசித்து வரும் தமிழக குடிமகன் என்றார்.

கேரளா குறித்தும் அதன் முதலமைச்சர் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் கேரளாவையும் , பினராயி விஜயனையும் தனக்கு பல காரணங்களுக்காக பிடிக்கும் என்றார். பின்னர் மய்யம் என்று எப்போதும் பேசுவதன் பொருள் என்ன என கேட்ட போது , மய்யம் என்பது ஏதோ எல்லாவற்றிலும் இருந்து தப்பிக்க எடுத்த முடிவு என நினைப்பது தவறு என்றும், நடுவில் நின்று அனைத்தையும் அறிந்து எது சரி என பார்த்து அதன் பக்கம் நிற்பதே என்றார் கமல்ஹாசன்.

அரசியல்வாதியான ஆன பிறகு ஏற்படும் விமர்சனம் குறித்து பதிலளித்த கமல்ஹாசன் , விமர்சனம் என்பது தவிர்க்க இயலாத ஒன்று என்றும் தான் ஒரு திறந்த புத்தகமாகவும் அந்த புத்தகம் மக்களிடம் இருக்கிறது என்றும் தெரிவித்தார். மக்கள் இன்னும் அரசனையே எதிர்பார்க்கிறார்கள், அதனால் தான் தலைவா , தலைவா என கோஷம் போடுகிறார்கள்; வழிகாட்டுபவனை விட அவர்களை ஆளவே ஆட்களை தேடுகிறார்கள். தமிழக மக்கள் இப்போதுதான் ஜனநாயகத்தை படித்து வருகிறார்கள் ; அவர்கள் தேட வேண்டியது தலைமை பண்புகள் மிக்க தலைவனை, அரசனை அல்ல என்றார்.

Leave a Response