மிஸ்டர் சந்திரமெளலி – திரைவிமர்சனம்..!

அப்பா கார்த்திக்கும் மகன் கவுதம்கார்த்திக்கும் இணைந்து நடித்திருக்கிற படமென்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் குறை வைக்கவில்லை.

கார்த்திக் ஏன் தொடர்ந்து நடிக்காமல் போனார்? என்று கேட்க வைத்துவிட்டார். படத்தில் நாயகனின் அப்பா என்று அவரைச் சொல்ல முடியாது அவர்தான் நாயகன். முழுக்கை சட்டையை முழுமையாக விட்டு பட்டன் போட்டுக் கொண்டு அவர் வரும் அழகு வருஷம் 16, மெளனராகம் படங்களை நினைவு படுத்துகிறது.

தேர்ந்த நடிப்பையும் அலட்டிக்கொள்ளாமல் வெளிப்படுத்தி அசத்துகிறார். குத்துச்சண்டை வீரராகத் துடிப்புடன் இருப்பதும் காதல் காட்சிகளில் புகுந்து விளையாடுவதும் கவுதம் கார்த்திக்குக்குப் புதிதில்லை, ஆனால், அப்பா இதெல்லாம் பொய்தானே என்று கலங்கி அழும்போது அவர் நடிப்பில் கல் மனமும் கரையும்.

நாயகி ரெஜினாவின் அழகைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அவர் அதற்குப் போட்டியாக தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார். காதலனுக்குக் கண்ணின் கடைப்பார்வை மட்டுமல்ல கண்களையே காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

வரலட்சுமி சரத்குமாரும் தன் பங்குக்கு ஆச்சரியப்படுத்துகிறார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி. கார்த்திக்குக்கு ஈடுகொடுப்பது சுலபமில்லை ஆனால் ஈடு கொடுத்திருக்கிறார். வரலட்சுமியின் பாத்திரமும் அதன் செயல்களும் அழகிய கவிதை. அவர் பற்றிய முழுவிவரங்கள் இல்லாதது குறை. சதீஷ், அகத்தியன், சதீஷ் விநாயக் ஆகியோர் தங்களின் பங்களிப்பை நன்றாகச் செய்திருக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் ரெஜினாவும் படமும் வண்ணமயமாகியிருக்கின்றன. சாம்.சி.எஸ் இன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பொருத்தம்.

இரண்டு அடிகள் மட்டுமே கண் பார்வை தெரியும் என்று புதிதாக ஒன்றைச் சொல்லி திரைக்கதைக்கு வலுச் சேர்க்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழில் போட்டிக்குப் பல அப்பாவிப் பொதுமக்கள் பலியாவதைப் பின்புலத்தில் சொல்லி, குறிப்பாக பாசமிகு ஒரு குடும்பம் பலியாகும் வலியுடன் பொழுது போக்கு அம்சங்களையும் கலந்து சொல்லியிருப்பதில் இயக்குநர் திரு வெற்றி பெற்றிருக்கிறார்.

Leave a Response