ரஜினியின் உருவபொம்மை எரிப்பு : நாகர்கோவிலில் பரபரப்பு..!

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் ஏற்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் அவரது படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டததின்போது, பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மருததுவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு அழைத்து அவர்களுக்கு நிவாரண உதவியும் ஆறுதலும் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தன்போது சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் கலவரம் ஏற்பட்டது என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தூத்துக்குடி போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்தியதாகவும் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அந்தோணி முத்து தலைமையில் ரஜினியின் உருவப்படத்தை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் ரஜினியின் உருவப்படத்தை அவர்கள் எரித்தனர். திடீரென இந்த சம்பவம் நடந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response