சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிபடுத்த, அமெரிக்கா செல்ல உள்ளதாக கட்சி தலைமை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, அண்மை காலமாக உடல்நலம் இல்லாததால், முழுவீச்சில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் உள்ளார். ஆனாலும், கட்சியைப் பலப்பத்தும் நோக்கில், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பங்கேடுத்து வருகிறார். தமிழகத்தில் நடக்கும் அரசியல் குறித்து அவ்வப்போது குரல்கொடுத்து வருகிறார் விஜயகாந்த். நீட் தேர்வு, காவிரி விவகாரம், ஆசிரியர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து அவர் குரல் கொடுத்து வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதியை தான் சந்திக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் விஜயகாந்த் சமீபத்தில் கூறியிருந்தார். கருணாநிதியிடம் உடல்நலம் விசாரிக்க மட்டுமே நான் விரும்பினேன் என்றும் அதற்கு ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். விஜயகாந்த் திரைத்துறையில் காலபதித்து 40 ஆண்டுகள் நிறைவையொட்டி, தேமுதிக சார்பில் அவருக்கு விழா எடுக்கப்பட்டது.

இப்படி அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் விஜயகாந்த் தன்னுடைய உடல்நலத்தைப் பற்றி சிறிதும் எண்ணாமல், கலந்து கொண்டாலும், அவரது குரல் முன்பு போல் இல்லை. அவரது மேடைப்பேச்சு புரியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டைப் பிரச்சனை இருப்பதுதான் என்று அவரது மனைவி பிரேதமலதா கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். 2017 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்றார். அதேபோல 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று வந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த், சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விஜயகாந்துக்கு தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிப்படுத்த மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாகவும் அவருடன் அவரது மனைவி பிரேமலதா செல்ல உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response