தினேஷ் தற்கொலைக்கு பிறகாவது டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்-வைகோ..!

நெல்லை மாணவன் தினேஷ் தற்கொலைக்கு பிறகாவது டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தையின் மதுப் பழக்கம் காரணமாக நெல்லையில் 12-ஆம் வகுப்பு மாணவன் தினேஷ் என்பவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் தற்கொலையை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தந்தையின் குடிபழக்கத்தால் நெல்லையில் பிளஸ்-2 மாணவன் தினேஷ் தற்கொலை செய்த சம்பவத்தை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தற்கொலை செய்வது வருத்தம் அளிக்கக்கூடியது.

எதுவாக இருந்தாலும் வாழ்ந்து போராட வேண்டும். டாஸ்மாக் கடைகளை எதிர்த்து தினேஷ் போராடியிருக்கலாம். மாணவன் தினேஷ் தற்கொலைக்கு பிறகாவது டாஸ்மாக் கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். எனது தாய் 100 வயதிலும் மதுவை எதிர்த்து போராடி இறந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response