இயக்குநர் பாரதிராஜா, சீமான் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்-தமிழிசை..!

இயக்குநர் பாரதிராஜா, சீமான் போன்றோர் அந்நிய சக்திகளின் தூதுவர்களாக செயல்படுகின்றனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தொழில் பிரச்னைக்காக பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் காவிரி பிரச்னையை முன்னிறுத்துவதாக கூறினார்.

அவர்கள்தான் அந்நிய சக்திகளின் தூதுவர்களாக செயல்படுகின்றனர் எனவும் தமிழிசை விமர்சித்தார். நடிகர் ரஜினிகாந்தை கர்நாடக காவியின் தூதர் என பாரதிராஜா விமர்சித்திருந்த நிலையில் தமிழிசை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

முன்னதாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஓட்டுமொத்த தமிழர்களும் போராடிய போது, நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்து பதம் பார்க்க நினைப்பதாக ரஜினிகாந்த் மீது பாரதிராஜா குற்றஞ்சாட்டினார்.

இலங்கைத் தமிழர், நியூட்ரினோ, மீத்தேன் பிரச்னைகள் குறித்து வாய் திறக்காமல், காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாசாரம், இதை ஆரம்பத்திலே கிள்ளியெறிய வேண்டும் என கூறியதன் மூலம், ரஜினிகாந்த் தமிழன் அல்லாத கர்நாடகக் காவியின் தூதுவர் என்பது பட்டவர்த்தனமாக தெரிவதாகவும் பாரதிராஜா விமர்சித்தார். எதைப்பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வே ண்டும் என்றும், இல்லையென்றால் தமிழக மக்கள் ஓரங்கட்டிவிடுவார்கள் என்றும், அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் பாரதிராஜா, ரஜினிகாந்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Response