டாஸ்மாக் கடையில் கூட்டம் குறைந்து, இளநீர், குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறதோ அது தான் சிறந்த நாடு – சீமான்..!

ஜாதி, மதங்களால் அரசியல் கட்சிகள் மக்களை பிளவுபடுத்தி இருக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சி அப்படி இல்லை. தமிழர் என்ற உணர்வுடன் அனைவரையும் அது இணைக்கும்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் பேச்சை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் திரண்டு பிரச்சாரத்துக்கு வந்து கொண்டிருப்பதால் நாம் தமிழர் கட்சி கிடுகிடுவென மக்கள் பார்வையை திசை திருப்பி வருகிறது. ஸ்டேட் டூ சென்ட்ரல் வரை ஒருத்தரையும் மிச்சம் வைக்காமல், அதே சமயம் வஞ்சனை இல்லாமல் கொட்டி தீர்த்து விமர்சித்து வருகிறார் சீமான்.

இப்படித்தான் பொள்ளாச்சியில் பிரச்சாரம் நடைபெற்றது. ஏற்கனவே நடந்து முடிந்த சமாச்சாரங்களால் கொதித்து போய் உள்ள பொள்ளாச்சி, சீமான் பேச்சினால் மேலும் அனல் பறந்தது! அப்போது அவர் பேசியவைகளில் ஒரு சில.

“சமூகம் சீர்கெட்டு இருக்கு. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதுக்கெல்லாம் காரணம் நன்னெறி கல்வி இல்லாததுதான். படிக்கிற பிள்ளைகளுக்கு நீதி, ஒழுக்கத்தை கற்றுத்தரவேண்டும். பெண்களுக்கு மதிப்பு தராத எந்த இடமும் முன்னேறாது.

அரசு பள்ளியும், அரசு ஆஸ்பத்திரி இருந்தும் அங்கே தரமில்லை. அரசு பள்ளியில் வேலை பார்ப்பவர்களே தங்கள் பிள்ளைகளை அங்கே படிக்க வைப்பதில்லை. அரசு ஆஸ்பத்திரியில் அரசியல் தலைவர்கள் சிகிச்சைக்கு போவதில்லை.

தமிழ்நாட்டில் மரங்களையும், இயற்கையையும் பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே கிடையாது. நாடு பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்களை பட்டினியினால் கொல்வதை விட பயங்கரவாதம் ஒன்றும் பெரியதல்ல.

இங்கு ஜாதி, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரிக்கப்படுகின்றனர். ஆனால், நாம் தமிழர் கட்சி அப்படி இல்லை. தமிழர் என்ற உணர்வுடன் அனைவரையும் இணைக்கும். அதேபோல வாக்காளர்களுக்கு பணம் தருவதில்லை. ஆனால் உயர்ந்த கொள்கைகளை கொண்டிருக்கிறது.

எந்த நாட்டில் டாஸ்மாக் கடையில் கூட்டம் குறைந்து, இளநீர், குளிர்பான கடைகளில் கூட்டம் அலை மோதுகிறதோ அது தான் சிறந்த நாடு” என்றார்.

Leave a Response