ஸ்டெர்லைட் ஆலைக்கு மூலப்பொருட்களை ஏற்ற வந்த லாரிகளை சிறைபிடித்த மக்கள்…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் 59-வது நாளாக இன்றும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்காக கப்பலில் இறக்குமதி செய்து கொண்டுவரப்பட்ட மூலப்பொருளான தாமிரத்தாது, மணல் போன்றவை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதனை ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு செல்ல கனரக லாரிகள் நேற்றிரவு வந்தன.

மூலப்பொருட்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தபோது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்குழுவை சேர்ந்தவர்கள், 3 லாரிகளை மடக்கி சிறைபிடித்தனர். அத்துடன், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையினை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டக்காரர்கள் சமரசம் ஆகவில்லை. ஆலைப்பொருட்கள் அத்துமீறி கொண்டுசெல்லப்படுவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Response