2 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..

காவிரி பிரச்னை தொடர்பான போராட்டங்களால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டி நடைபெறுமா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 1000 நாட்களுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும், ரசிகர்கள் இடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் சீசன் 11 துவங்கியுள்ளது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளன. முதலில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வென்றது. மற்றொரு தமிழரான தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சீசனின் மூன்றாவது ஆட்டத்தில் விராட் கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வென்றது.

நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது. சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு நடக்கும் இந்த சீசனின் 5வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன. தடையால் இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் களமிறங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் போட்டி நடக்க உள்ளதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிலும், ஆர்வத்திலும் உள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. அதில் 10 முறை சிஎஸ்கே வென்றுள்ளது. கொல்கத்தா 6 முறை வென்றுள்ளது. சென்னை மைதானத்தில் இரு அணிகளும் விளையாடிய 7 போட்டிகளில் சிஎஸ்கே 5 முறை வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக, 2015 மே 10ம் தேதி சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. அதில் சிஎஸ்கே, 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 1095 நாட்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டி நடைபெற உள்ளதால், சொந்த மண்ணில் டோணியின் சிங்கங்கள் கர்ஜனை இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Response