ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை போராட்டம் தொடரும்-குமரெட்டியாபுரம் மக்கள்..

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வெளிவரும் வரை போராட்டம் தொடரும் என்று குமரெட்டியாபுரம் மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதுவரை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ. குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மற்றும் அண்டை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டம் மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறி வருவதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை பின்பற்றாததால் பராமரிப்பு பணி முடிந்து மீண்டும் ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கான உரிமம் நிராகரிக்கப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்படுமா என்று குமரெட்டியாபுரத்தில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தும் மகேஷ் என்பவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது : மாசுகட்டுப்பாட்டு வாரியம் உரிமம் நிராகரித்ததால் ஸ்டெர்லைட் ஆலை தற்போது மட்டுமே திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்து விரைவில் அனுமதி பெறப்படும் என்று வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததாக சொல்வதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அந்த ஆலை முற்றிலுமாக அந்த இடத்தில் இருந்து அகற்றப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று மகேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Response