திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி-விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகள் போராட்டம்…

சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானம் இருக்கும் பகுதியை நோக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பல்வேறு எதிர்ப்புகளை மீறி சென்னை சேப்பாக்கத்தில் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி இன்று நடக்கிறது. இதற்காக கிரிக்கெட் வீரர்கள் பேருந்து மூலம் ஆழ்வார்பேட்டை விடுதியில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் விளையாட்டிற்கான நேரம் நெருங்கி வர நெருங்கி வர சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் இருந்து சேப்பாக்கம் நோக்கி பேரணியாக செல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சித்தனர். அவர்களை போலீசார் வாலாஜா சாலை அருகே தடுத்து நிறுத்தியதால் மைதானத்தை முற்றுகையிட வந்தவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கரள கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தியும் அவர்கள் ஒத்துழைக்காததால் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

இதே போன்று அண்ணா சாலை பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைகளில் கருப்பு பலூனுடன் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட வந்தனர். ஐபிஎல் போட்டிகள் வேண்டாம் என்று வலியுறத்தும் வாசகங்கள் அச்சிடப்பட்ட பலூன்களை கையில் வைத்துக் கொண்டு அதனை பறக்க விட முயன்றனர். சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்காமல் இருப்பதற்காக மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Response