ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பு-போட்டிகள் நடைபெறுமா…?

ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் காவல்துறை ஆணையரிடம் வலியுறுத்தினர்.

டி 20 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் சிஎஸ்கே அணி பங்கேற்கவுள்ள 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகளுக்கான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 50,000 இருக்கைகள் உள்ளது. அனைத்து இருக்கையும் காலியாக இருந்தால் ஏன் காலியாக உள்ளது என்பதன் மூலம் உலகம் முழுவதும் பைசா செலவில்லாமல் போராட்டத்தை கொண்டு சேர்க்க முடியும். காவிரிக்காக 50,000 பேர் தியாகம் செய்தால் 7 கோடி மக்களுக்கு உதவும்.’ இவ்வாறு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் குரல் கொடுத்தார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க கூடாது என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். அதையும் மீறி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் தொண்டர்கள் டிக்கெட் வாங்கி மைதானத்துக்குள் நுழைந்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

டிடிவி தினகரன், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் ஐபிஎஸ் கிரிக்கெட் போட்டிகளை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் இன்று தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிராக எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. ஏராளமான சிக்கல்களால் சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எந்த போராட்டமும் இல்லாமல் சுமூகமாக நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காவிரிக்காக ரசிகர்கள் கிரிக்கெட்டை புறக்கணிப்பார்களா? பார்க்கலாம்.

Leave a Response