ரஜினி, கமல் படங்களை கர்நாடகாவில் திரையிட கூடாது-வாட்டாள் நாகராஜ்

பெங்களூர்: நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட விட கூடாது என கன்னட சலுவளி வாட்டாள் கட்சி என்ற கர்நாடக மாநில கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் இருவருமே கர்நாடகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை பேசியதாக குற்றம்சாட்டி நாகராஜ் இவ்வாறு அழைப்புவிடுத்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடப்பதால் கோபமடைந்துள்ளன கன்னட அமைப்புகள். ஒசூர் அருகேயுள்ள கர்நாடக எல்லைப் பகுதியான அத்திபெலேயில் இன்று, கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்பு தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்று, தமிழகத்திற்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து தமிழகம் நோக்கி நடை பயணம் செல்ல தொடங்கிய அவர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

இதன்பிறகு கூட்டத்தினரிடையே பேசிய வாட்டாள் நாகராஜ் “காவிரி நீர் பங்கீட்டில் கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநியாயம் இழைக்கப்பட்டு வருகிறது. இப்போதுதான், உச்சநீதிமன்ற தீர்ப்பால் சிறிது நியாயம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், கர்நாடகாவிற்கு மீண்டும் பெருத்த அநியாயம் நிகழும். கர்நாடக அணை கட்டுப்பாடுகள் முழுக்க மத்திய அரசிடம் சென்றுவிடும்.

தமிழக அரசு அரசியலுக்காக காவிரியை வைத்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றோர், காவிரி விவகாரத்தில் இதுவரை கருத்து கூறியதில்லை. ஆனால், இப்போது தங்கள் அரசியல் லாபத்திற்காக காவிரி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இவ்விரு நடிகர்களின் திரைப்படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க கூடாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயன்றால், நாமும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும். தமிழக போராட்டத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டி வரும். தமிழகத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் நகைப்புக்குரியது. தமிழகத்திற்கு காவிரி விவகாரத்தில் அநியாயம் ஆகவில்லை. கர்நாடகாவுக்குதான் அநியாயம் ஆகியுள்ளது. இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்…

Leave a Response