மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை..!

நாகர்கோவில்: தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் ஒருவர் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கோட்டாரை சேர்ந்தவர் ஐயாவு. இவரது மனைவி நித்யா. இவர் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், வயிற்று வலி கரணமாக கோட்டாரில் உள்ள லஷ்மி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 5வது மாடியிலிருந்த தமது அறையை விட்டு திடீரென ஓடி வந்த நித்யா, ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நித்யாவுக்கு ஐயாவு இரண்டாவது கணவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நித்யாவுக்கு குழந்தை இல்லாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் நித்யாவின் தற்கொலையில் மர்மம் நீடிப்பதால், போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response