திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலில் புதன்கிழமை வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
அப்போது அர்ச்சகர்களாலோ, கோவில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளாலோ அறிந்தோ, அறியாமலோ ஏதேனும் குறை அல்லது தவறு உள்ளிட்டவை நடந்திருந்தால், அவற்றைக் களைய உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அதன்படி, புதன்கிழமை கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது.
இதற்காக தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ரோஜா, சாமந்தி, மல்லிகை, கனகாம்பரம், அரளி, சம்பங்கி, தாழம்பூ, தாமரை, அல்லி உள்ளிட்ட 3 டன் மலர்களும், மரிக்கொழுந்து, தவனம், மருவம், துளசி, வில்வம், கதிர்பச்சை உள்ளிட்ட இலைகளும் தருவிக்கப்பட்டன. புஷ்ப யாகத்துக்கு முன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அதன்பிறகு அவர்களை கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சகர்கள் அர்ச்சனை செய்தனர்.
இதில், ரூ. 516 செலுத்தி பங்கு கொண்ட தம்பதியருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை உற்சவமூர்த்திகள் தங்க பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனர். இதில் கோவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.