திருப்பதிக்கு உலகம் முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஏழுமலையானின் தரிசனத்துக்கு அடுத்த படியாக லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். நீண்ட நாள் கெடாத வகையில் லட்டு பிரசாதத்தை தயார் செய்ய தேவஸ்தானம் பல வழிகளைக் கடைபிடித்து வருகிறது. பூந்தி தயாரிக்க தனி மடப்பள்ளி, லட்டு பிடிக்க தனி மடப்பள்ளி, பூந்திகளையும, லட்டுகளையும் கொண்டு செல்ல மூடப்பட்ட கன்வேயர் பெல்ட், தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதங்களை கொண்டு செல்ல மூடப்பட்ட தனி வாகனம், லட்டு தட்டுகளை சுத்தம் செய்ய வெந்நீர் கெய்சர்கள் என அனைத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதும் தேவஸ்தான ஊழியர்களுக்கு ஏழு மலையான் பிரசாதங்களான லட்டு, வடைகளை இலவசமாக வழங்குவது வழக்கம். ஊழியர்களுக்கு அனுப்பப்படும் லட்டுகள் அதற்கான தட்டுகளுடன் அனுப்பி வைக்கப்படும். பிரசாதங்கள் வழங்கப்பட்ட பின்னர் தட்டுகள் திருமலைக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் சுவிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட லட்டு பிரசாதங்களை ஊழியர்களுக்கு வினியோகம் செய்த பின்னர் தட்டுகளை ஆம்புலன்சில் ஏற்றி நேற்று திருமலைக்கு கொண்டு வந்தனர். மடப்பள்ளி அருகே லட்டு தட்டுகள் ஆம்புலன்சில் வந்து இறங்கின. இதைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்கள் பதிலளிக்காமல் சென்றதால் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். அதற்கு அவர் சுத்தம் செய்யப்பட வேண்டிய தட்டுக்கள் தான் அவை என்று பதிலளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் தேவஸ்தான உயர் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர். திருப்பதிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வாங்கிச் செல்லும் லட்டு பிரசாதத்தை ஊழியர்கள் அலட்சியமாக கையாண்டு வருகின்றனர்.
விபத்து மற்றும் பலவித நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்சில் புனிதமான லட்டு பிரசாதத்தை வைக்கும் தட்டுகளைக் கொண்டு சென்றால் அதன் மூலம் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை அறியாமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் தேவஸ்தான அதிகாரிகளின் செயல் வேதனை தருகிறது. இவ்வாறு நடந்து கொண்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:-
ஏழுமலையானின் பிரம்மோற்சவ வெகுமதியாக திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அளிக்க லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டது. லட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பின்பு காலி தட்டுக்கள் ஆம்புலன்ஸ்களில் திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லட்டு தட்டு கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை கொண்டு செல்ல பயன்படுத்துவது கிடையாது. அவை மருத்துவ மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்தும் ஆம்புலன்ஸ். அதனால் லட்டு தட்டுக்கள் கொண்டு வந்ததில் எந்தவித அபசாரமும் நிகழவில்லை என்று தெரிவித்தனர்.
ஆண்டுக்கு பலகோடி ரூபாய் வருவாய் கிடைத்து வரும் திருமலை தேவஸ்தானத்திற்கு லட்டு தட்டுக்களை ஆம்புலன்சில் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. நூற்றுக்கணக்கான வாகனங்களை வைத்திருக்கும் தேவஸ்தானத்திற்கு லட்டு பிரசாத தட்டுகளை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்தான் கிடைத்ததா?