ரஜினி, கமல் அரசியலில் தோற்க வேண்டும்: நடிகர் சத்யராஜ் பரபரப்பு பேட்டி..

sathyaraj04

கமலும், ரஜினியும் அரசியல் பிரவேசம் செய்து விட்டார்கள். இருவரில் அரசியலில் சாதிக்கப்போவது யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் முன்னணி அரசியல் கட்சிகளை கைவிட்டு மக்களின் கவனம் புதிதாக தொடங்க இருக்கும் இவர்களது கட்சியின் பக்கம் திரும்புமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.கமல் வருகிற 21-ந் தேதி ‘நாளை நமதே’ என்ற கோ‌ஷத்தோடு அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார். ரஜினியும் தான் தொடங்கப் போகும் கட்சிக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.இப்படி இருவரது அரசியல் பயணமும் வேகம் எடுத்துள்ள நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்கள் இருவரையும் மக்கள் ஒரு போதும் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று பரபரப்பாக பேசினார்.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூக நீதிப் பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்ற கூட்டத்தில் நடிகர் சத்யராஜும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி வருகின்றன. நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்து இருக்கிறார்கள். ஏன் நானே 3 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரபல நடிகர்கள் என்பதால் எல்லாம் தெரிந்தவர்கள் என்று அவர்களை ஒருபோதும் நம்பி விடாதீர்கள். அவ்வாறு நினைப்பது தவறு. நடிகர்கள் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வியெல்லாம் இல்லை. வெற்றி பெற்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்பதை யோசியுங்கள். எனவே நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும்.

கடவுள் பெயரால் ஏற்றத் தாழ்வு உருவாகிவிடலாகாது. புரிதலுடன் கூடிய நாத்திகர்கர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெரியாரின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பிடிக்கவில்லை என்றால் ஏற்க வேண்டாம்.

இவ்வாறாக பேசினார் நடிகர் சத்யராஜ்.

Leave a Response