உ.பி.யில் பிரதமர் மோடியை ராவணனாகவும் ராகுலை ராமனாகவும் சித்தரித்து போஸ்டர்

ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு பிறகு முதன்முதலாக இன்று தனது சொந்த தொகுதியான அமேதிக்கு செல்கிறார்.

இன்று மதியம் அங்கு செல்லும் அவர் 2 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 7 இடங்களில் ரோடுஷோ நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார். மேலும் பொதுமக்களுடன் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

ராகுல் சுற்றுப்பயணம் செய்வதையடுத்து அமேதி தொகுதி முழுவதும் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராகுலை வரவேற்று ஏராளமான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் ஒரு போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த போஸ்டரில் மோடியை ராவணனாகவும், ராகுலை ராமனாகவும் சித்தரித்துள்ளனர். 10 தலைகளுடன் இருக்கும் மோடியை, ராகுல்காந்தி எதிர்த்து நிற்பது போல அந்த படம் உள்ளது.

modi

அதில் ராகுல் ராமனின் அவதாரம், 2019-ல் ராகுலின் ராஜ்ஜியம் வரப்போகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல இன்னொரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், அர்ச்சுனனுக்கு தேரோட்டி செல்லும் கிருஷ்ணராக ராகுலை சித்தரித்துள்ளனர். அந்த படத்தில் போர் தொடங்கிவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response