விதி மதி உல்டா – விமர்சனம்

தமிழ் சினிமாவில் புதுப்புது கதைகளோடு இளம் இயக்குனர்கள் பலரும் படையெடுத்து வருகிறார்கள். அவற்றில் பல அடுத்த தலைமுறைக்கான படங்களாக அமைவதோடு நல்ல வசூலையும் குவித்து வருகின்றன. அந்த வகையில் பொழுதுபோக்குக்கு எந்த குறைவும் இல்லாமல், புது வித கதையை உருவாக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் படமே ‘விதி மதி உல்டா’.

படத்தின் கதைப்படி, வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டில் ஜாலியாக இருக்கும் நாயகன் ரமீஸ் ராஜாவின் அப்பா ஞானசம்பந்தம், வீடு புரோக்கர் சென்ட்ராயனுக்கு கமிஷன் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார். அதனால் ரமீஸ் ராஜாவை கடத்தி பணம் சம்பாதிக்க நினைக்கிறார் சென்ட்ராயன். நாயகி ஜனனி ஐயரை ரமீஸ் ராஜா காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்ல நினைக்கும் நேரத்தில் கடத்தப்படுகிறார். அதே நேரத்தில் ரமீஸ் ராஜாவும் கடத்தப்படுகிறார். அவரை அடைத்து வைத்த இடத்தில் நடக்கும் ஒரு சில சம்பவங்களால் மிகப்பெரிய ரவுடியான டேனியல் பாலாஜியின் ஒரே தம்பி கொல்லப்படுகிறார். டேனியல் பாலாஜி கோபத்தில் ஜனனி, ரமீஸ் ராஜா இருவரின் குடும்பத்தையும் கொலை செய்து விடுகிறார். நடந்தவை எல்லாமே கனவு என்பதை ரமீஸ் ராஜா உணர்கிறார். கொஞ்ச நேரத்தில் நடக்கும் செயல்கள் ஒவ்வொன்றாய் அவரின் வாழ்வில் நடக்க அதிர்ச்சி அடைகிறார். அந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பித்தார்? என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் ரமீஸ் ராஜா, ஏற்கனவே டார்லிங் 2 படத்தில் நடித்தவர் தான். துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்க்கிறார். பாடல் காட்சிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி ஜனனி வழக்கம் போல அழகாக வந்து போயிருக்கிறார். பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். டேனியல் பாலாஜி, கருணாகரம், சென்ட்ராயன், ஞானசம்பந்தம், சித்ரா லட்சுமணன், குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.

அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் பரவாயில்லை. மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.

னாம் வாழ்வில் எதிர்காலத்தில் நடப்பது முன்பே தெரிந்தால் என்ன பிரச்சினைகள் ஏற்படும், அதனால் எவ்வளவு குழப்பங்கள் ஏற்படும், என்ன நல்ல விஷயம் என்பதை திரைக்கதையாக்கி கதை சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விஜய் பாலாஜி. முன்னர் வந்த ஒரு சில காமெடி படங்களை போலவே காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். அதில் குழப்பம் இல்லாமல் தெளிவாகவே படத்தை கொண்டு போயிருக்கிறார். முருகதாஸின் உதவியாளர் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார்.

Leave a Response