நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ. – விமர்சனம்!!

தேங்காய் பொறுக்கிய அமாவாசையாக இருந்து, பின் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக மாறி “சோழர் பரம்பரையில் ஒரு MLA” என குலுங்க குலுங்க சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த சத்யராஜ் – மணிவண்ணன் அதிரடி கூட்டணியின் 25வது படம். அமைதிப்படையின் 2 ஆம் பாகம்!

கட்சியில் தனது செல்வாக்கை வளர்த்து கொண்டு, கட்சியினரை மிரட்டி தான் நினைத்த பதவிகளை அடையும் சத்யராஜ் துணை முதல்வர் பொறுப்பு வகிக்கிறார். எந்தெந்த வழிகளில் எல்லாம் கொள்ளை அடிக்க முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் கொள்ளை அடிக்கிறார். ஒரு கட்டத்தில் காடுகளை அழிக்கவும் முன்வருகிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகள், சத்யராஜ் நினைத்தது நடந்ததா? போன்ற முக்கிய கேள்விகளை இரண்டரை மணி நேர படத்தில் சொல்லியிருக்கிறார் மணிவண்ணன்.

ஒரு தொகுதியின் MLA-வான சத்யராஜ் இந்த படத்தில் மாநிலத்தின் துணை முதல்வராக வருகிறார். அமைதிப்படை போலவே நக்கலும், நையாண்டியுமாக அசத்துகிறார். இந்த படத்திலும் இன்ப அதிர்ச்சியாக இன்னொரு இளம் சத்யராஜ். ஆனால் இடைவேளையில் ஆரவாரமாக என்ட்ரி கொடுத்து பின் இரண்டாவது பாதியில் ஆஃப் ஆகி கிளைமாக்ஸ்-ல் மீண்டும் என்ட்ரி கொடுத்து முடிகிறார். மற்றபடி படத்தில் ஹீரோ என்றால் வில்லன் சத்யராஜ் தான்.

சத்யராஜ் கூடவே வந்து படம் முழுவது கல கலவென்று சிரிக்க வைக்கிறார் இயக்குனர் மணிவண்ணன். ஒவ்வொரு அரசியல்வாதியை பற்றியும் அசால்ட்டாக கலைத்து விடுவதில் மன்னன் இந்த மணிவண்ணன். சின்னவீடு செட்டப் செய்யும் காமெடிகளும் ஆரவாரம்.

மணிவண்ணனின் மகன் ரகுவண்ணன் சத்யராஜ் மகனாக இந்த படத்தில் நடித்துள்ளார். வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்திருக்கலாம் என்பது அனைவரின் கருத்து. சீமான் பொதுநல பிரச்சினைகளுக்கு போராடும் வேடத்தில் நடித்துள்ளார். அவர் சம்பந்தபட்ட கட்சிகளும், காட்டுக்குள் நடக்கும் சண்டைக்காட்சிகளும் பார்ப்பதற்கு அலுத்து போகும் அளவுக்கு அரதபழசு. நிறைய காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன.

பெயருக்கு நான்கு கதாநாயகிகள். யார் எதற்கு வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்குள் படமே முடிந்து போகிறது. இதற்கிடையில் ஐட்டம் சாங் வேற.

முக்கியமாக எதிர்பார்க்கபட்ட விஷயம் படத்தின் இசை. ஆனால் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி பெரிய சொதப்பல். கால சூழலுக்கு ஏற்ற இசையை வழங்க மறந்து விட்டார். ஏன் இப்படி ஒரு பெரிய ஓட்டை மிஸ்டர். ஜேம்ஸ் வசந்தன். படத்தில் ஒளிப்பதிவு பரவாயில்லை.

படத்தில் வசனங்களுக்கு மக்கள் மத்தியல் பெரிய வரவேற்பு. மற்றபடி வசனங்களுக்காகவே கதையை உருவாக்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அது ஒரு பெரிய மைனஸ்.

தமிழக அரசியல் களமா? அல்லது திருவாங்கூர் சமஸ்தான ஆட்சியா? என கேட்க வைக்கிறது படத்தின் லொகேஷன்கள். படம் முழுக்க காடு, மலை என்று வருவதும் சலிப்பு. மொத்தத்தில் படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ” அமைதிப்படை அளவுக்கு இல்லை”.