கலாமின் வல்லரசு கனவுக்கு வடிவம் கொடுக்கும் அர்ஜுனின் ஜெய்ஹிந்த்-2!!

நடிகராக மட்டுமல்லாது ஒரு இயக்குநராகவும் வெற்றி பெற்றவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். தேசபக்திப் படங்கள், காதல், குடும்பப் படங்கள் என விதவிதமாக ஆக்ஷன் கலந்து கொடுத்தவர்.

1992-ல் இவர் இயக்கிய முதல் படம் சேவகன். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதாப் படத்தை இயக்கினார். பின் 1994-ல் இவர் இயக்கிய ஜெய் ஹிந்த் பெரும் வெற்றி பெற்றது. இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 2006-ல் மதராஸி எனும் படத்தை தமிழ் – தெலுங்கில் இயக்கினார். அதன் பிறகு படங்கள் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

அர்ஜூன் தான் இயக்கிய வெற்றிப்படமான ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். அர்ஜூன், ரஞ்சிதா, கவுண்டமணி, செந்தில் நடித்திருந்த ஜெய் ஹிந்த் பெரிய வெற்றிப் படமாகும். கடமை தவறாத காவல் அதிகாரியாக நடித்திருந்தார் அர்ஜூன்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை, அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் இயக்குகிறார். தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்கிறார். படத்தின் நாயகனும் அவரே. மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சுர்வின் சாவ்லா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர, நான்கு இளம் நடிகைகளும், நான்கு மாணவர்களும் இதில் அறிமுகமாகின்றனர்.

இந்தப் படம் குறித்து அர்ஜூன் கூறுகையில், “இந்தப் படம் மீடியாவுக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் எனது சமர்ப்பணமாகும். இந்தப் படத்தில் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற கலாமின் கனவுக்கு ஒரு வடிவம் கொடுக்கிறேன். இந்தப் படத்தில் எனது முந்தைய படங்களின் தொடர்ச்சி எதுவும் இருக்காது.

இந்த படம் வழக்கமான காதல், ஆக்ஷன் படமாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான படமாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தவாறு அவசியமான ஒரு கருத்தை கதைக்களமாக கையில் எடுத்திருக்கிறேன். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தயாராகும் இந்த படத்தின் பட்ஜெட் 20 கோடிகளை தாண்டும். அந்த அளவிற்கு பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை தயாரிப்பதும் நான் தான். சென்னை, மும்பை, டெல்லி உள்பட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்துகிறோம்,” என்றார்.