சின்ன கான்செப்டை எடுத்துக்கிட்டு பெரிய மெசேஜ் சொல்றதுக்கு முயற்சி பண்ணிருக்கிற படம்தான் உள்குத்து!

Ulkuthu
ஒரு மீனவக் குப்பம். அதுல பாலசரவணன்

வாயில வடை சுடுற ரவுடி. ‘சுறா சங்கர்னா சும்மாவா?’னு பஞ்ச் டயலாக் பேசிக்கிட்டு திரியுறாரு. அவரோட தங்கச்சி நந்திதா!

அந்த குப்பத்துக்கு அப்பாவியா வந்து சேருறாரு தினேஷ். அவருக்கு தங்க இடமும் கொடுத்து, மீன் மார்க்கெட்ல வேலையும் போட்டுக் கொடுக்குறாரு பால சரவணன்.

தமிழ் சினிமா பார்முலாபடி தினேஷுக்கும் பாலசரவணனோட தங்கச்சி நந்திதாவுக்கும் லவ்ஸ் ஸ்டார்ட் ஆவுது.

அது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மீன் வெட்டுற வேலை செஞ்சிக்கிட்டே பக்கத்துக் குப்பத்து தாதாவோட காட்டுத்தனமா மோதுறாரு தினேஷ். அந்த தாதாவோட ஆளுங்க யாரப் பாத்தாலும் அடின்னா அடி அப்படியொரு அடி.

அடிச்சுத் துவைக்கிறதோட நிறுத்திக்காம அந்த தாதாவோட புள்ளைய கடல்ல கூட்டிட்டு போய் வெட்டிச் சாய்க்குறார்.

“புள்ளப் பூச்சி மாதிரி நம்மகிட்டே அடைக்கலம் தேடி வந்தவன், இப்போ சுனாமியா சீறுறானே. இவனோட பேக் ரவுண்ட் என்னவா இருக்கும்? இவனப் போய் காதலிச்சுத் தொலைச்சோமே”னு நொந்து போய் நிக்கிற நந்திதாகிட்டே பிளாஷ்பேக்கை ஓப்பன் பண்றாரு தினேஷ்.

எதிர்பார்ப்போட இன்டர்வல் போய்ட்டு வந்தா…

தினேஷ் ஏன் இந்த குப்பத்துக்குள்ள வந்தாரு, தாதாவோட மகன ஏன் போட்டுத் தள்ளினார்ங்கிறத தினேஷ் தன் காதலி நந்திதாகிட்டே சொல்ற மாதிரி போகுது திரைக்கத
தை!

அட்டகத்தி தினேஷுக்கு மொகத்த பாவமா வெச்சுக்கிட்டு எதிரிய வெச்சு செய்யுற கேரக்டர். அமைதியான ஆசாமியா இன்ட்ரோ கொடுத்துட்டு அதிரடி அவதாரம் எடுக்குறதாவட்டும் நந்திதாவோட கண்ணாலேயே ரொமான்ஸ் பண்றதாவட்டும் எல்லாத்தையுமே பெருசா அலட்டிக்காம பண்ணிருக்காரு. அதுக்காக அவருக்கொரு பாராட்ட சொல்லிடுவோம்!

அடுத்து ஹீரோயின் நந்திதா. தென்னங்குருத்துக்கு சுடிதார் போட்ட மாதிரி பளீர்னு இருக்காங்க. அங்கிட்டும் இங்கிட்டுமா சில சீன்ல எட்டிப் பார்க்குறது, ஒரு பாட்டுக்கு ஜாலியா ஒரு டான்ஸ போடுறதுனு நந்திதாவோட போர்ஷன் கம்மிதான். கொடுத்த வேலய கச்சிதமா செஞ்சிருக்காங்க!

பாலசரவணன் செகன்ட் ஹீரோவாட்டம் படம் முழுக்க வர்றாரு. படு சீரியஸான இந்த படத்துல அவரு பண்ற சின்னச் சின்ன காமெடி ஆறுதலா இருக்கு!

குப்பத்து தாதாவா சரத் லோகிஸ்தவா. தனக்கு இவன் வேண்டாம்னு ஒருத்தன முடிவு பண்ணிட்டா அந்தாளை கபடி விளையாடவிட்டு கொல பண்ற வில்லன். சும்மா சொல்லக்கூடாது, நல்ல கம்பீரமா அந்த கேரக்டரை பண்ணிருக்காரு!

தினேஷுக்கு அக்காவா வர்ற சாயாசிங், சாயாசிங்குக்கு கணவரா வர்ற ஜான்விஜய், தாதாவோட மகனா வர்ற திலீப் சுப்புராயன், அடியாளா வர்ற SRIமன், செஃப் தாமு இப்படி எல்லாருமே அவங்கவங்க கேரக்டரை கொற வெக்காம செய்திருக்காங்க!

படத்துக்கு மியூஸிக் ஜஸ்டின் பிரபாகரன். பாட்டெல்லாம் மனசுல நிக்கலைன்னாலும் பின்னணி இசைல அசத்திருக்காரு!

படத்தோட இயக்குநர் கார்த்திக் ராஜு. வன்முறையை மையமா வெச்சு அது மூலமா வன்முறை கூடாதுனு மெசேஜ் சொல்றதுதான் இயக்குநரோட நோக்கம்.

தனக்கு வேண்டப்பட்டவங்களை போட்டுத் தள்ற ரவுடியை ஹீரோ பழிவாங்குற கதையெல்லாம் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே பழசுதான். ஆனாலும், விறுவிறுப்பான ஸ்கிரீன்பிளே அந்த குறை தெரியாம பாத்துக்குது!

Leave a Response