அசோக்குமார் தற்கொலை வழக்கு: அன்புச்செழியன் மீதான போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை!

நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையும், இயக்குநர் சசிகுமாரும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது உறவினர் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக இருந்தார். இந்நிலையில், நவம்பர் 21-ம் தேதி அசோக்குமார் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் எனக் கூறி, நடிகர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தற்கொலைக்குத் தூண்டியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

pic

பின்னர் கந்துவட்டி கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டது. சமீபத்தில் விசாரணை சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீஸார் அன்புச்செழியனைத் தேடி வருகின்றனர்.

அன்புச்செழியன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அன்புச்செழியனின் மேலாளர், அலுவலக நிர்வாகி என இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தனக்கு எதிராக பதிவு செய்யபட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அன்புச்செழியன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்ததபோது, மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய குற்றப்  பிரிவுக்கும், சென்னை காவல் ஆணையர் மற்றும் நடிகர் சசிகுமாருக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அதுவரை அன்புச்செழியன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டார்.

அப்போது இயக்குநர் சசிகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட அன்று மதியம் 1.45 மணியளவில் தொடர்ந்து அன்புச்செழியனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பிறகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், வழக்கை ஜனவரி முதல் வாரத்திலேயே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிபதி, தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்தால் வழக்கு முன் கூட்டி விசாரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Response