10 பேரை பலிகொண்ட துவரங்குறிச்சி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலியான சோகம்!

van1jpg

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே, நேற்று நள்ளிரவில் போர்வெல் லாரிமீது வேன் மோதியது. இந்த விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 10பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாகர்கோவில் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர், வைத்திலிங்கம். இவர், நேற்று மதியம் தனது உறவினர்கள், குடும்பத்தினர் 15 பேர் சகிதமாக திருப்பதி கோயிலுக்கு டெம்ப்போ டிராவலர் வேனில் கிளம்பினர். .

டிரைவர் ராஜேஷ் என்பவர் வேனை ஓட்ட, வாகனம் நேற்று நள்ளிரவு துவரங்குறிச்சி அருகே வந்துகொண்டிருந்தது. சுமார் 11.40 மணியளவில், மதுரை-திருச்சி சாலையில் உள்ள துவரங்குறிச்சி ஊருக்குள் செல்லும் மூரணிமலை திருப்பத்தில் உள்ள சர்வீஸ் ரோட்டில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த போர்வெல் லாரிமீது வேன் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த வைத்திலிங்கம் உள்பட 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் என 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்துகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்கபூர் தலைமையிலான போலீஸார் மற்றும் தீயணைப்புப் படைவீரர்கள், விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

 

வேன் கடுமையாக நசுங்கி இருந்ததால், மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 1 மணிநேரம் போராடி, படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய 5 பேர் மீட்கப்பட்டனர். காயமடைந்த நாகர்கோவில் அடுத்துள்ள வடசேரியைச் சேர்ந்த வைஷ்ணவி, நாகர்கோவில் கீழத்தெருவைச் சேர்ந்த தானம்மாள், கன்னியாகுமரி புன்னார் குளத்தைச் சேர்ந்த வேலாதேவி, கார்த்திக், வேன் டிரைவர் ராகேஷ் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

van2jpg

விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலிருந்து வந்த போர்வெல் லாரி, துவரங்குறிச்சியை அடுத்த முத்துப்பட்டி கிராமத்துக்குப் போர் போட வந்ததாகவும், போர்வெல் லாரியை டிரைவர் சந்திரசேகரன் ஓட்டிவர, போர்வெல் ஆப்ரேடர் ஶ்ரீரங்கன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள், ஜெனரேட்டர் வண்டியில் உட்கார்ந்திருந்தனர், வேலைப்பளு காரணமாக சாலையோரம் வண்டியை நிறுத்தி ஓய்வெடுக்க இடம் தேடியுள்ளனர். இதனால், போர்வெல் லாரி மிக மெதுவாகப் போனதாகவும், பின்னால் வந்த வேன் மோதியதால்தான் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது. ஒருவேளை போர்வெல் ஊழியர்கள் இதே வாகனத்தில் வந்திருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்றும், படுகாயம் அடைந்துள்ள ராஜேஷ், வைத்திலிங்கம் ஆகியோர் குணமடைந்தால், விபத்துக்கான காரணம் முழுமையாகத் தெரியும் என்கிறார்கள் போலீஸார். இந்தச் சம்பவம், பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கியுள்ளது.

Leave a Response