மேலும் இரண்டு டிடிவி ஆதரவு எம்.பிக்கள் முதல்வர் பழனிசாமி அணிக்குத் தாவல்!

49a6fde2818298950f552792f521e998

 டிடிவி தினகரன் ஆதரவாளர்களான இரண்டு எம்.பிக்கள் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அக்கட்சி இரண்டாக பிரிந்தது. அதிமுக (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியும், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், இரு அணிகளாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஒன்றாக இணைந்தனர். இரு தினங்களுக்கு முன்பு இந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கியது .

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பால் கலக்கமடைந்த தினகரன் ஆதரவாளர்களான மாநிலங்களை அதிமுக உறுப்பினர்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோகுலகிருஷ்ணன் ஆகிய மூவரும் அணி தாவினர்.

அவர்கள் மூவரும் திங்கள் கிழமை மாலை 5.30 மணி அளவில் சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு சென்று தங்களது ஆதரவு தெரிவித்ததோடு, தாங்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களான மேலும் இரண்டு எம்.பிக்கள் இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் எம்.பி உதயகுமார் மற்றும் வேலூர் எம்.பி செங்குட்டுவன் ஆகிய இருவரும்தான் இன்று முதல்வரை சந்தித்துள்ளனர். இவ்வாறு தினமும் அணி மாறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது தினகரன் தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Leave a Response