தீவிரமடையும் ஜெ.,வின் கை ரேகை தொடர்பான வழக்கு! ஆதார் அட்டையை சமர்ப்பிக்கச்சொல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!


sasikala-jayalalithaa-1484650406

ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவின் ஆதார் அட்டை இருந்தால் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மூன்று தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Madras-High-Court

அந்த மனுவுடன் கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸையும், அவருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரியும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா தனது இடதுகை பெருவிரல் ரேகையை தேர்தல் ஆணையத்தின் படிவம்- ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் பதிவு செய்து கொடுத்துள்ளார். அதை அரசு மருத்துவரான பாலாஜி சான்றொப்பம் செய்துள்ளார். இந்த படிவங்களில் ஜெயலலிதா சுய நினைவோடு தான் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே உரிய மருத் துவ ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் ஜெயலலிதா கைரேகையின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

jayalalithaa_Sasikala_anjali_2016_12_09

இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் ஏற்கனவே தேர்தல் ஆணைய அதிகாரிகள், மருத்துவர் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான உண்மைத்தன்மையை ஆராய, ஜெயலலிதாவின் ஆதார் அட்டை இருந்தால், அதை தாக்கல் செய்ய வேண்டும் என ஆதார் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவரது கைரேகை பெறப்பட்டிருக்கும் என்பதால், ஜெயலலிதாவின் கைரேகை மற்றும் அவைதொடர்பான ஆவணங்களுடன் பரப்பன அக்ரஹார சிறை கண்காணிப்பாளரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு நீதிபதி வேல்முருகன் ஒத்திவைத்தார்.

Leave a Response