தஞ்சாவூரில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளிவந்த ஐவர் கைது !

arrested-handcuffs
தஞ்சாவூரில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளிவந்த ஐவரை கைது செய்த தஞ்சை காவலாளர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், ஐயம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பிரபாவதி மற்றும் காவலாளர்கள் ஐயம்பேட்டை மதகடி பஜார் பகுதியில் சுற்றுப் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்ததில், குடமுருட்டி ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த பசுபதிகோயில், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த பிச்சையன் மகன் சதீஷ் என்பவரைக் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் உள்ளிக்கடை மாகாளிபுரம் பிரிவு சாலையில் மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை நிறுத்தி விசாரித்ததில் லாரியில் அனுமதியின்றி மூன்று யூனிட் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரி ஓட்டுநர் பள்ளி அக்ரஹாரம் சாந்தி நகர் மேலத்தெருவைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பவரை கைது செய்து லாரியைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மேலவழுத்தூர் பகுதியில் ஐயம்பேட்டை காவலாளர்கள் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேலவழுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே தஞ்சாவூர் – குடந்தை பிரதான சாலையில் மணல் ஏற்றி வந்த ஒரு மினி லோடு ஆட்டோவை நிறுத்தி விசாரித்தில், அனுமதியின்றி குடமுருட்டி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

உடனே மினி ஆட்டோவைப் பறிமுதல் செய்த காவலாளர்கள் வன்னியடி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கோவிந்தராஜ் (50) இளங்கார்குடி, ஐய்யனார் கோயில் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் விஜய்சங்கர், இளங்கார்குடி நடுத்தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.

Leave a Response